Published : 05 Oct 2021 03:11 AM
Last Updated : 05 Oct 2021 03:11 AM

காஞ்சிபுரத்தில் பட்டுப் பூங்கா ஓரிரு மாதங்களில் திறப்பு; தறி இயந்திரங்கள் செயல்பாட்டுக்கு வந்தன; பெண்களுக்கு 66 % வேலைவாய்ப்பு

காஞ்சிபுரம் கீழ்கதிர்பூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பட்டுப் பூங்கா.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தை அடுத்த கீழ்கதிர்பூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பட்டுப் பூங்கா உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின்பு திறக்கப்பட உள்ளது. அங்கு நிறுவப்பட்டுள்ள கைத்தறி இயந்திரங்கள் தற்போது முதல்கட்டமாக செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், இங்கு 66% பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பட்டுக்குப் புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில் ரூ.83.33 கோடியில் பட்டுப் பூங்கா அமைக்கப்படும் என்று கடந்த 2012-ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. இதற்காக அரசு, ரூ.14 கோடி மதிப்புள்ள 75 ஏக்கர் நிலம், மானியத் தொகையாக ரூ.7.54 கோடியையும் ஒதுக்கியது. மற்ற தொகை தனியார் மூலம் முதலீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதற்குப் பிறகு இதற்கான பணிகள் விரைவாக நடைபெறவில்லை. காஞ்சிபுரத்தை அடுத்த கீழ்கதிர்பூர் கிராமத்தில் பட்டுப் பூங்கா அமைக்கும் பணிகள் அப்படியே கிடப்பில் போட்டப்பட்டன. கடந்தஆண்டு இதற்கான பணிகள் ஓரளவுக்கு நடைபெற்றன. திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் இந்தப் பட்டுப் பூங்காவை செயல்பாட்டுக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

முதல்கட்டமாக தறி நெய்வதற்கான கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தறி இயந்திரங்கள் பொருத்தப்பட்டு துணி நெய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. பல்வேறு தனியார் நிறுவனங்கள் தறி நெய்வதற்கான கைத்தறி இயந்திரங்களை பொருத்தி வருகின்றன. இந்தப் பட்டுப் பூங்காவில் கைத்தறிக்கு என தனிப் பிரிவும், சாயப்பட்டறைகள், விற்பனைப் பிரிவுகள் உட்பட பல அமைக்கப்பட உள்ளன. இங்கு 66 சதவீதம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சாயமிடுதல் நடைபெறும்போது நீர் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்பட உள்ளன.

இங்கு மொத்தம் 2,160 கைத்தறி இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன. நெசவாளர்களுக்கு 700 குடியிருப்புகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 82 யூனிட்டுகளாக இவை இயங்க உள்ளன. பட்டு கைத்தறி நெசவுக்காக 22 யூனிட்டுகளும், காட்டன் கைத்தறி துணிகள் நெசவு செய்ய 30 யூனிட்டுகளும் ஒதுக்கப்பட உள்ளன. மற்ற 30 யூனிட்டுகளில் சாயமிடுதல் உள்ளிட்ட கைத்தறிச் சார்ந்த இதரப் பணிகள் நடைபெற உள்ளன.

இதுகுறித்து காஞ்சிபுரம் பட்டுப் பூங்காவின் தலைவர் சுந்தர் கணேஷ் கூறும்போது, “தற்போது இங்கு கைத்தறி நெசவு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கு பெரும்பாலும் வேலைகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க திட்டமிட்டுள்ளோம். சாயமிடுதல் உள்ளிட்ட பணிகளையும் விரைவில் இங்கு கொண்டுவர உள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x