Published : 05 Oct 2021 03:11 AM
Last Updated : 05 Oct 2021 03:11 AM
வேலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தியோர் மட்டும் ஓட்டலில் அமர்ந்து சாப்பிட முடியும். குமரியில் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க கரோனா தடுப்பூசி செலுதத்திய சான்று காட்ட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அங்குள்ள 6 பேரில் 4 பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தக் கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். அருகில் உள்ள தின்பண்டக் கடையின் உரிமையாளர் தடுப்பூசி செலுத்தாமல் இருந்ததால், அந்தக் கடையைப் பூட்டினர். உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் திடீர் நடவடிக்கையால் ஓட்டல் உரிமையாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் செந்தில்குமார் கூறும்போது, ‘‘மாவட்டத்தில் சுமார் 1,000 ஓட்டல்கள் உள்ளன. வேலூரில் இன்று (அக்.4) மட்டும் சுமார் 25-க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில், ஒரு ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்கள்.
தடுப்பூசி செலுத்தாமல் யாராவது இருந்தால் ஓட்டலுக்கு சீல் வைக்கப்படும். தடுப்பூசி செலுத்தினால் மட்டும் கடையைத் திறக்க அனுமதிக்கப்படும். அதேபோல், வரும் நாட்களில் தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே ஓட்டல்களில் உணவருந்த அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளோம்” என்றார்.
மதுபானம் வாங்க சான்றிதழ்
இதேபோன்று, கன்னியாகுமரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்கவேண்டும் எனில் கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது குறுஞ்செய்தியை விற்பனையாளரிடம் காண்பித்தாக வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மதுபானம் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டார்களா என்பதற்கான சான்றிதழ்களை, டாஸ்மாக் மதுக்கடை மேற்பார்வையாளர்கள் ஆய்வு செய்யவேண்டும். இப்பணிகளை மேற்கொள்ள தவறும் டாஸ்மாக் பணியாளர்கள் மீது, பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ எனமாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT