Published : 03 Oct 2021 03:13 AM
Last Updated : 03 Oct 2021 03:13 AM

நெல்லை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை; 10,000 ஹெக்டேரில் விளைந்துள்ள நெல் சேதமின்றி தப்புமா?- 65 சதவீத பரப்பில் அறுவடை பாக்கியுள்ளதால் விவசாயிகள் கவலை

பாளையங்கோட்டை அருகே வெள்ளக்கோயில் பகுதியில் அறுவடைக்கு தயாராக விளைந்துள்ள நெற்பயிர்கள். படம்: மு. லெட்சுமி அருண்

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் சுட்டெரித்த வெப்பம் தணிந்து மழை பெய்துவருவது பலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மாவட்டத்தில் இன்னும் 65 சதவீத பரப்பில், அதாவது 10 ஆயிரம் ஹெக்டேரில் நெல் அறுவடை நடைபெற வேண்டியிருப்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இன்னும் இருவார காலத்துக்குப்பின் மழை பெய்ய வேண்டும் என்பதுதான் அவர்களது பிரார்த்தனையாக உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பு கார் பருவ சாகுபடி நிறைவடையும் தருவாயை எட்டியிருக்கிறது. கடந்த ஜூன் முதல் வாரத்திலேயே பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளில் இருந்து கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தாலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சில வாரங்கள் கழிந்த பின்னரே விவசாயிகள் சாகுபடி பணிகளை தொடங்கி னர்.

பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு பாசனப் பகுதிகளில் 15 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் 120 நாள் பயிரான அம்பை 16 ரகத்தையே விவசாயிகள் பயிரிட்டுளளனர். ஒருசில இடங்களில் நெல் அறுவடை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மழை நீடித்தால் நெற்பயிர்களுக்கு சேதம் ஏற்படும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பாளையங்கோட்டை அருகே வெள்ளக்கோயில் பகுதியில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயி எஸ். அருண் கூறும்போது, ‘‘பாளையங்கோட்டை ஒன்றிய பகுதிகளில் பயிரிட்டுள்ள நெற்பயிர்கள் இன்னும் இரு வாரத்தில் அறுவடைக்கு தயாராகிவிடும். இப்போதுதான் நெல்மணிகளில் பசுமை காய்ந்து பழுப்புநிறம் தெரிய தொடங்கியிருக்கிறது.

நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகி விட்ட நிலையில் கனமழை எச்சரிக்கை விவசாயிகளுக்கு கவலை அளித்துள்ளது. ஓரிரு நாள் பெய்யும் மிதமான மழைக்கு நெற்கதிர்கள் தப்பிவிடும். மழை நீடித்தால் நெற்கதிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கும் அபாயம் உருவாகும். அவ்வாறு மூழ்கும் பயிர்கள் 4 நாட்களில் முளைத்துவிடும்.

இன்னும் இருவாரத்துக்குப்பின் மழை பெய்தால் பயிர்கள் தப்பிவிடும். சாகுபடிக்கு செலவிட்ட தொகை இழப்பின்றி கிடைக்கும். பயிர்கள் சேதமடைந்தால் பெரும் பாதிப்பை சந்திக்க வேண்டியிருக்கும்’’ என்றார்.

திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கஜேந்திரபாண்டியன் கூறியதாவது:

மாவட்டத்தில் கார் பருவத்தில் மொத்தம் 15 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர் களில் இதுவரை 35 சதவீதம் மட்டுமே அறுவடை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 65 சதவீதம் நெற்பயிர்கள் அறுவடை செய்ய வேண்டியிருக்கிறது. மணிமுத்தாறு பாசனத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 50 சதவீதத்துக்குமேல் அறுவடை நிறைவடைந்திருக்கிறது.

பாபநாசம் அணைப்பாசன பகுதிகளில் இன்னும் அறுவடை செய்யப்பட வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போதைக்கு பலத்த மழை பெய்யக்கூடாது என்பதுதான் நெல் பயிரிட்டுள்ள விவசாயிகளின் பிரார்த்தனை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x