Published : 30 Sep 2021 07:44 AM
Last Updated : 30 Sep 2021 07:44 AM

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இருவருக்கு மரணம் அடையும் வரை ஆயுள் சிறை: கடலூர் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேருக்கு மரணம் அடையும் வரையில் ஆயுள் தண்டனை விதித்து கடலூர் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகில் உள்ள குமாரக்குடியைச் சேர்ந்தவர்கள் குணசேகரன் என்ற திலகர் (34), கட்டமணியன் என்ற ஜெயசங்கர் (49). இருவரும் கடந்த 12-2-2019 அன்று அப்பகுதியில் உள்ள கோயிலின் அருகே நின்று, அவ்வழியாக சென்ற 14 வயது சிறுமியை தாக்கி கோயிலின் பின் பகுதிக்கு தூக்கிச் சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனால், வேதனை அடைந்த அந்த சிறுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று, பின்னர் காப்பாற்றப்பட்டார். இதுகுறித்து சிறுமியின் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் சேத்தியாத்தோப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை கடலூர் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எழிலரசி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், சிறுமியை பாலியல்வன்கொடுமை செய்த குற்றத்துக்காக இருவருக்கும் இயற்கைமரணம் அடையும் வரையில் சிறையில் வைத்திருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், நீதிபதி தனது தீர்ப்பில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் மாநில அரசு சார்பில் தர வேண்டும். ஏதாவது ஒரு நிதியின்கீழ் சிறுமியின் எதிர்காலத்தை மேம்படுத்திட இந்தத் தொகையை 30 நாட்களுக்குள் வழங்கிட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டர். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் தி.கலாசெல்வி ஆஜரானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x