Published : 28 Sep 2021 03:18 AM
Last Updated : 28 Sep 2021 03:18 AM

புன்னைநல்லூர் - மாரியம்மன் கோயிலில் தேங்காய் நீர் பிரசாத கருவி: மத்திய இணை அமைச்சர் தொடங்கி வைத்தார்

தஞ்சாவூர் அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் புதிதாக நிறுவப்பட்டுள்ள தேங்காய் தண்ணீரை சுத்திகரித்து பிரசாதமாக வழங்கும் நவீன இயந்திரத்தை நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கிறார் மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல். உடன், ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஐஐஎப்பிடி இயக்குநர் அனந்தராமகிருஷ்ணன் மற்றும் பலர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில்உடைக்கப்படும் தேங்காயிலிருந்து வெளியாகும் தண்ணீர் வீணாவதை தடுப்பதுடன் அதை, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கும் நவீன கருவிமக்கள் பயன்பாட்டுக்கு நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவுப் பதன தொழில்நுட்பக் கழகத்தினர் (ஐஐஎப்பிடி) இந்த நவீன கருவியை வடிவமைத்து, தஞ்சாவூர் அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் நிறுவியுள்ளனர். இந்த நவீன கருவியை மத்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழிற்சாலைகள், நீர்வளத் துறை இணைஅமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் இந்திய உணவுப் பதன தொழில்நுட்பக் கழக இயக்குநர் அனந்தராமகிருஷ்ணன் கூறும்போது, ‘‘புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் ஒரு நாளைக்குகுறைந்தபட்சம் 5 ஆயிரம் தேங்காய்கள் உடைக்கப்படுகின்றன. அதில் இருந்து வெளியேறும் தண்ணீரை பக்தர்களுக்கு சுத்திகரித்து பிரசாதமாக வழங்க முடிவு செய்தோம். ரூ.7 லட்சம் செலவில் இந்த நவீன இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முதலாக இங்கு தான் இந்த இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது’’ என்றார்.

இயந்திரம் செயல்படும் விதம்

இயந்திரத்தில் உள்ள அரிவாள் போன்ற இரும்பில் தேங்காயை உடைத்ததும், அதன் தண்ணீர், இயந்திரத்திலிருந்து வடிகட்டுதல் மற்றும் வெப்பமற்ற பதப்படுத்தும் அமைப்பிலான கருவிக்கு மாற்றப்படுகிறது. அங்கிருந்து குளிரூட்டும் கருவிக்கு தேங்காய் நீர் சென்று, தானியங்கி இயந்திரம் மூலம் சுத்திகரித்து டம்ளரில் நிரப்பி பக்தர்களுக்கு வழங்கப்படும். இந்த நீரை ஒரு வார காலம் வரை சேமித்து வைக்கலாம். தேங்காய் நீரில் உள்ள ஊட்டச்சத்து அப்படியே இருக்கும். இதில், ஒரு மணிநேரத்துக்கு 50 லிட்டர் வரை வடிகட்டலாம், அத்துடன் குளிரூட்டும் கருவியிலும் 50 லிட்டர் அளவுக்கு சேமிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x