Published : 28 Sep 2021 03:19 AM
Last Updated : 28 Sep 2021 03:19 AM

முதல்வர் வீட்டின் முன் தீக்குளித்த நபரால் பரபரப்பு: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல்

சென்னை / தென்காசி

தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஒன்றியம் ஜமீன் தேவர்குளம் ஊராட்சித் தலைவர் பதவி, பட்டியல் இன சமூகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதே ஊரைச் சேர்ந்த வெற்றிமாறன் (48), அவரது மனைவி சபரியம்மாள் (46), மதிமுகவைச் சேர்ந்த ராமசாமி ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

வேட்புமனு பரிசீலனையின்போது வெற்றிமாறனுக்கு வீட்டுவரி பாக்கி இருப்பதை ராமசாமி தரப்பினர் சுட்டிக்காட்டினர். இதனால், வெற்றிமாறன் மற்றும் அவரது மனைவியின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, ராமசாமி, போட்டியின்றித் தேர்வானார்.

இதனால் விரக்தியில் இருந்த வெற்றிமாறன், நேற்று காலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டின் அருகே வந்து, தான் மறைத்து வைத்திருந்த ‘டர்பன்டைன்’ என்ற திரவத்தை உடலில் ஊற்றி, தீவைத்துக் கொண்டார்.

அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் தீயை அணைத்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தேனாம்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்று, வெற்றிமாறனிடம் நலம் விசாரித்தார். மேலும், அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

இதுகுறித்து, மதிமுக தென்காசி மாவட்டச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன் கூறும்போது, “வெற்றிமாறன் புகார் கூறியுள்ள பாலகிருஷ்ணன், ஏற்கெனவே ஊராட்சித் தலைவராக இருந்தபோது, மத்திய, மாநில அரசுகளின் விருதுகளைப் பெற்றவர்.

ஆடியோ ஆதாரம் உள்ளது

அவரிடம், தனக்கு ரூ.5 லட்சம் கொடுத்தால் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக வெற்றிமாறன் பேசிய ஆடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது. எனவே, வெற்றிமாறன் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு பாலகிருஷ்ணன் காரணமல்ல” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x