Published : 23 Sep 2021 06:48 PM
Last Updated : 23 Sep 2021 06:48 PM

திமுக ஆட்சியில் குட்கா லோடு லோடாக விற்பனை: ஈபிஎஸ் குற்றச்சாட்டு

ராணிப்பேட்டை

திமுக ஆட்சியில் குட்கா லோடு லோடாக விற்பனையாகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (செப்.23) மாலை நடைபெற்றது. ராணிப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

‘‘இப்போதுள்ள திமுக அமைச்சர்களில் 8 பேர் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள். அவர்கள் கட்சியில் ஆட்கள் இல்லை. எல்லாருக்கும் வயதாகிவிட்டது. நம்மை அவர்கள் வாடகை டாக்ஸியைப் போல் அழைத்துச் செல்கிறார்கள். அவர்கள் நம்மைப் பார்த்து அவதூறாக பேசசுகிறார்கள்.

அதேபோல், முன்னாள் அதிமுகவைச் சேர்ந்த 15 பேர் இப்போது திமுகவில் எம்எல்ஏக்களாக இருக்கிறார்கள். நம் கட்சியிடமே விலைக்கு வாங்கி நம்மை அழிக்கப் பார்க்கிறார்கள். நடந்து முடிந்த தேர்தலில் நாம் கொஞ்சம் சுறுசுறுப்பாக இருந்து 1.98 லட்சம் ஓட்டு பெற்றிருந்தால் 45 தொகுதியைப் பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கலாம்.

உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினர் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். ஆனால், இந்த முறை அது நடக்காது. நாங்கள் விடமாட்டோம்.

கூட்டுறவு வங்கிகளில் திமுகவை நம்பி நகையை அடமானம் வைத்தவர்கள் வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 5 பவுனுக்குக் கீழ் இருந்தால் தள்ளுபடி என்றார்கள். இப்போது, ஒரு குடும்பத்தில் ஒருத்தருக்கு என்று கூறுகிறார்கள். ஆக தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பிறகு அப்படியே எதிர்மறையாகப் பேசுவது திமுகதான்.

திமுக ஆட்சிக்கு வந்த 4 மாதத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து, சட்டம் ஒழுங்கு பாதித்துள்ளது. வாணியம்பாடியில் சமூக ஆர்வலர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுவிட்டது. இப்போது குட்கா லோடு லோடாகப் போகிறது. விற்பனை அதிகமானால்தான் இப்படிப் போகும். திமுக ஆட்சியில் நிர்வாகத் திறமை இல்லை.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளை அதிமுக கைப்பற்றியுள்ளது. அரிகிலபாடி தலைவராக வள்ளி, வேட்டாங்குளம் தலைவராக ஷாலினி, நெல்வாய் தலைவராக ரேணுகா ஆகியோர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.’’

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன், கே.சி.வீரமணி மற்றும் மாவட்டச் செயலாளர் சு.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x