Published : 20 Sep 2021 03:19 AM
Last Updated : 20 Sep 2021 03:19 AM

காட்டுமன்னார்கோவில் அருகே விபத்தில் சிக்கிய தம்பதியரை மீட்ட அமைச்சர்

காட்டுமன்னார்கோவில் அருகே விபத்தில் சிக்கிய தம்பதியினரை வேளாண் அமைச்சரின் உதவியாளர், போலீஸார் ஆகியோர் மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கடலூர்

வீராணம் ஏரிக்கரை சாலையில் விபத்தில் சிக்கிய தம்பதியரை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

காட்டுமன்னார்கோவில் சகஜானந்தா நகரைச் சேர்ந்தவர் சேகர் (62). இவரது மனைவி சுலோச்சனா (58). இருவரும் இருசக்கரவாகனத்தில் வீராணம் ஏரிக்கரை சாலையில் நேற்று காலை சென்றனர். எதிரே வந்த வாகனம் ஒன்று அவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த சேகர்-சுலோச்சனா தம்பதியர் சாலையில் விழுந்து கிடந்தனர். அப்போது அந்த வழியாக காரில் சென்ற வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இதனை பார்த்து தனது வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கினார்.

வயதான தம்பதியினரை மீட்டு அவருடைய பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி சென்று மருத்துவமனையில் சேர்க்குமாறு உதவியாளருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து பாதுகாப்பு போலீஸார் மற்றும் தனி உதவியாளர் ஆகியோர் அந்த தம்பதியினரை மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த விபத்து குறித்து புத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சரின் மனிதாபிமான இந்தச் செயல் பொதுமக்களிடம் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x