Published : 20 Sep 2021 03:20 AM
Last Updated : 20 Sep 2021 03:20 AM
விருதுநகரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபம் அடிப்படை வசதிகளின்றி வெறும் காட்சிப் பொருளாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
விருதுநகர் அருகேயுள்ள சூலக்கரை மேடு பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி- வள்ளியம்மை தம்பதிக்கு 26.1.1895-ல் மகனாகப் பிறந்தவர் தியாகி சங்கரலிங்கனார். காங்கிரஸ் கட்சியில் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். 1927 மற்றும் 1933-ல் விருதுநகர் வந்த மகாத்மா காந்திக்கு உறு துணையாகச் செயல்பட்டு வந்தவர் தியாகி சங்கரலிங்கனார்.
1937-ல் கரூரில் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்றதால் திருச்சி சிறையில் 6 மாதம் அடைக்கப்பட்டார்.
சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளுக்காக 27.7.1957ல் தனது வீட்டில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். பின்னர், விருதுநகர் தேசபந்து மைதானத்தில் போராட்டத்தை தொடர்ந்த அவர் 76-வது நாளில் உயிர் துறந்தார்.
தமிழக அரசு சார்பில் தியாகி சங்கரலிங் கனாருக்கு விருதுநகர் கல்லூரி சாலையில் ரூ.1.6 கோடியில் மணி மண்டபம் கட்டப்பட்டது. கடந்த 18.6.2015ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இம் மண் டபத்தை திறந்து வைத்தார்.
அடிப்படை வசதிகள் இல்லை
செய்தி மக்கள் தொடர்பு துறையால் பராமரிக்கப்படும் இந்த மணி மண்டபத்தில் தியாகி சங்கரலிங்கனாரின் மார்பளவு சிலை மட்டும் உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மணிமண்டபம் திறக்கப்படும். இங்கு அவரைப் பற்றிய வாழ்க்கை குறிப்புகளோ, வாழ்க்கை வர லாற்று தகவல்களோ இல்லை. மேலும் அவரது காலத்தில் வாழ்ந்த தலைவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வைக்கப்படவில்லை.
மணிமண்டபத்தை பார்வையிட வரும் பொதுமக்கள் மற்றும் பணியாளர்களுக்கு கழிப் பறை வசதி கூட இல்லை. மேலும் சுற்றுச்சுவரும் இல்லாததால் ஆவணங்கள் எதையும் வைத்து பாதுகாக்க முடியவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.
தமிழ்நாடு எனப் பெயர் பெற்றுத்தர தனது உயிரைத் தியாகம் செய்த தியாகி சங்கர லிங்கனார் மணி மண்டபத்தை பார்வையிட வரும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் அவரைப் பற்றிய வரலாறு தெரியாமலேயே செல்லும் நிலை உள்ளது.
எனவே தியாகி சங்கரலிங்கனார் வாழ்க்கை வரலாறு அடங்கிய தொகுப்புகளுடன் மணிமண்டபம் பேணப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT