Published : 11 Sep 2021 02:18 PM
Last Updated : 11 Sep 2021 02:18 PM
ராணிப்பேட்டை ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் நேற்று (செப்.10) பொறுப்பேற்றார். அவருக்கு அரசு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கர பாண்டியன் வேதியியல் பாடப்பிரிவில் முதுகலைப்பட்டம் பெற்றவர். 2005-ம் ஆண்டு திருச்சியில் துணை ஆட்சியராக அரசுப்பணியில் இணைந்தார்.
அதன் பிறகு, சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வருவாய் கோட்டாட்சியராகவும், 2008-ம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தின் மாவட்ட வழங்கல் அலுவலராகவும், 2009-ல் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தின் பொது மேலாளாராக பணியாற்றினார்.
2011-ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் இணை இயக்குநராகவும் அதன் பிறகு சென்னை டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளராகவும் பணியாற்றினார். 2012-ம் ஆண்டு தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நலக் கழகத்தின் பொதுமேலாளராகவும், 2013-ம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தின் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி 2014-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.
2018-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை முதல்வரின் தனிப்பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த பாஸ்கர பாண்டியன் அதன் பிறகு செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநராக பணியாற்றி வந்தார். 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் மாநில திட்டக்குழு செயல் உறுப்பினராக பணியாற்றி வந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் நேற்று காலை பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் கூறும்போது, ”செப்டம்பர் 12-ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. எனவே, இதுவரை தடுப்பூசி போடாத பொதுமக்கள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு கரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். கரோனா 3-வது அலையைத் தடுக்க மாநில சுகாதாரத்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் அடித்தட்டு மக்களுக்கு போய்ச் சேர நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல அரசின் திட்டங்கள் அனைத்து மக்களுக்கு முழுமையாக போய்ச் சேர வழிவகை செய்யப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT