Published : 06 Sep 2021 06:23 PM
Last Updated : 06 Sep 2021 06:23 PM
திமுக அரசு ஏமாற்றத்தைக் கொடுத்து விடுமோ என்ற எண்ணம் மக்களுக்குத் ஏற்படத் தொடங்கி உள்ளதாகத் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
''தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும். சரக்கு ஏற்றுமதி- இறக்குமதி மென்மேலும் உயரக்கூடிய வகையில் விமான நிலைய விரிவாக்கத்தையும் உறுதி செய்ய வேண்டும்.
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் 150-வது பிறந்த நாள் விழாவையொட்டி சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 14 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதைத் தமிழ் மாநில காங்கிரஸ் முழுமனதோடு வரவேற்கிறது.
கரோனா தொற்று குறைந்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கரோனா நோய் தொற்று உறுதியாகி உள்ளதைத் தமிழக அரசு தகுந்த முன் ஜாக்கிரதையோடு கையாள வேண்டும். அனைவருக்கும் கரோனா பரவாத வகையில் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும். உள்ளாட்சித் தேர்தலில் தமாகா வெற்றி பெறக்கூடிய இடங்களைத் தேர்வு செய்து, அதில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளைக் கேட்டுப் பெறுவோம். திமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் மக்களின் ஒரே எண்ணம். வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். அதை நம்பியே மக்களும் வாக்களித்திருக்கிறார்கள்.
திமுக அரசு ஏமாற்றத்தைக் கொடுத்து விடுமோ என்ற எண்ணம் மக்களுக்கு ஆரம்பிக்கத் தொடங்கி உள்ளது. கொடுத்த வாக்குறுதிகளில் முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய நிலையில் செயல்பட வேண்டும். குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய், நகைக் கடன் தள்ளுபடி, பயிர்க் கடன் தள்ளுபடி, மாதம் ஒருமுறை மின்சாரம் கணக்கீடு போன்ற அறிவிப்புகள் கிடப்பில் கிடக்கின்றன என்ற சந்தேகம் மக்களுக்கு எழுகிறது. எனவே, இவற்றை நிறைவேற்ற அரசு கவனம் செலுத்த வேண்டும்''.
இவ்வாறு வாசன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT