Published : 05 Sep 2021 03:17 AM
Last Updated : 05 Sep 2021 03:17 AM
தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கும் நடைமுறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியராகப் பணியாற்றி, குடியரசுத் தலைவராக உயர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்.5-ம் தேதி(இன்று) ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் நல்லாசிரியர் விருது வழங்கி, தமிழக அரசு கவுரவித்து வருகிறது. அதன்படி, நிகழாண்டில் 385 ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த விருது வழங்கும் நடைமுறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்கள் தற்போது தேர்வு செய்யப்படும் நடைமுறை குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தது:
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் எத்தனை விருதுகள் வழங்கப்பட உள்ளன என அரசிடமிருந்து முன்கூட்டியே அறிவிப்பு செய்யப்படும். அதன்படி, முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பி, ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெறுவார். அதன்பின்னர், 6 பேர் கொண்ட குழு அமைத்து, விண்ணப்பித்த ஆசிரியர்களிடம் நேர்காணல் நடத்தி, மாவட்டத்துக்கு வழங்கப்பட உள்ள விருதுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 1:2 என்ற வீதத்தில் விண்ணப்பங்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அவற்றிலிருந்து விருதுக்குரிய ஆசிரியர்களை தேர்வு செய்து, விருது வழங்குகின்றனர் என்றனர்.
இதுதொடர்பாக ஓய்வுபெற்ற ஆசிரியர் எஸ்.கவுதமன் கூறியது:
நான் பணியாற்றிய காலத்தில் நல்லாசிரியர் விருதுபெற எனது மாணவர்கள், எனது நலம்விரும்பிகள் என்னை நிர்பந்தித்தனர். ஆனால், விண்ணப்பித்து விருதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நடைமுறை காரணமாக நான் ஆர்வம் காட்டவில்லை. எனக்கு தெரிந்து, பல ஆசிரியர்களும் இதேபோல தவிர்த்து விட்டனர். அதேநேரத்தில், அரசிடம் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களும் திறமையாக, மிகுந்த கண்ணியத்துடன் பாடம் நடத்தக்கூடியவர்கள் என்பதில் மாற்றமில்லை.
தற்போது, அனைத்துத் துறைகளிலும் பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்துவரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆசிரியர்கள் தங்களுக்கு விருது கொடுங்கள் என விண்ணப்பிக்காத நிலையை உருவாக்கும் வகையில், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நடைமுறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்.
தகுதியுள்ள திறமையான ஆசிரியர்களை அரசே கண்டறிய வேண்டும். இதற்காக, அந்தந்தப் பகுதியில் உள்ள சமூக செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், பள்ளி மாணவர்களிடம் கருத்துகளைக் கேட்டும், ஆசிரியரின் பாடம் நடத்தும் திறன், பாடத்திட்டத்தையும் தாண்டி மாணவர்களின் பார்வையை விசாலமாக்கும் முயற்சியில் ஆசிரியர் காட்டும் அர்ப்பணிப்பு போன்றவற்றை ஆய்வு செய்து, விருது அறிவிக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT