Published : 03 Sep 2021 04:12 PM
Last Updated : 03 Sep 2021 04:12 PM
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பெற்றோரை இழந்து தவித்த மாணவரைப் பள்ளியில் சேர்த்து இலவசக் கல்வி பயில மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்தார். மேலும், படித்து முடித்து நல்ல பணிக்குச் சென்று மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள குரவைகுளத்தைச் சேர்ந்த தாய், தந்தையை இழந்த மாணவர் வெற்றிவேல் (13).
தந்தை கடந்த 07-12-2019 அன்று உயிரிழந்துவிட்டதாகவும், தாய் கடந்த 10-06-2021 அன்று உயிரிழந்தாகவும், தற்போது, தனது பாட்டி பூமி என்பவரது ஆதரவில் இருந்து வருவதாகவும், குடும்ப வருமானம் இல்லாததால் கல்வி பயில இயலாத சூழ்நிலை உள்ளதாகவும், பள்ளிப் படிப்பைத் தொடர்வதற்கு உதவுமாறும் மாவட்ட ஆட்சியருக்கு வெற்றிவேல் மனு அளித்தார்.
அதையடுத்து மாணவனின் நிலை குறித்து, வருவாய்த் துறை மூலம் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி விசாரணை செய்து, அருப்புக்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் ஏதும் இன்றி மாணவர் வெற்றிவேல் கல்வி பயில நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதற்காக மாணவன் வெற்றிவேலும் அவரது பாட்டி பூமியும் இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது, மாணவன் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்றுக் கல்வி கற்பதற்கு ஏதுவாக, செல்போன் ஒன்றையும் வழங்கி ஊக்கப்படுத்தினார். அதோடு, மாணவர் வெற்றிவேலுக்கு அகராதி மற்றும் பொது அறிவுப் புத்தகத்தைப் பரிசாக வழங்கி, சிறப்பாகக் கல்வி பயின்று நல்ல எதிர்காலத்தை அமைத்துக்கொண்டு, பொதுமக்களுக்கு சேவை ஆற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT