Published : 29 Aug 2021 11:18 AM
Last Updated : 29 Aug 2021 11:18 AM
பெற்ற குழந்தையை தாயே கொடூரமாக தாக்கும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தாய் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மணலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன் (26). கூலி தொழிலாளியான இவர், ஆந்திர மாநிலம், சித்தூர் தாலுகா, ராம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த துளசி (23) என்பவரை கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இத்தம்பதியினருக்கு 4 மற்றும் 2 வயதில் என இரு மகன்கள் உள்ளனர். கரோனா பரவலுக்கு முன்புவரை சென்னை, பழைய பெருங்குளத்தூரில் வசித்து வந்துள்ளனர். அப்போதிலிருந்தே தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 23-ம் தேதி 2 வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய துளசி, அதை வீடியோவாக எடுத்து தன் மொபைலில் வைத்துள்ளார். அவரே காயமடைந்த குழந்தையை புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.
இதற்கிடையே, கடந்த 40 நாட்களுக்கு முன் துளசியின் மொபைலை வடிவழகன் பார்த்தபோது, அதில் குழந்தையை துளசி தாக்கும் நான்கு வீடியோக்களை கண்டுள்ளார். அதில், குழந்தையை, துளசி காலணியாலும், கைகளாலும் கடுமையாக தாக்கியும், குழந்தையின் காலை முறுக்கி ஒடிக்கும் காட்சிகளும் இடம்பெற்று பார்ப்போரை அதிர வைக்கும் அளவுக்கு இருந்துள்ளது. இதனை வடிவழகன் தன் மொபைலுக்கு அனுப்பிக்கொண்டார். இதையடுத்து, குழந்தைகளை தன்னுடன் வைத்துக்கொண்ட வடிவழகன், மனைவி துளசியை அவரின் தாய் வீடான ஆந்திர மாநிலத்தில் உள்ள ராம்பள்ளியில் விட்டுவிட்டு வந்துவிட்டார்.
வடிவழகன் சேமித்து வைத்த வீடியோ உறவினர்கள், நண்பர்கள் மூலம் நேற்று இரவு (ஆக. 28) சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், இது குறித்து, சத்தியமங்கலம் போலீஸில் வடிவழகன் கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், தனிப்படை போலீஸார் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்ட போலீஸாரின் உதவியுடன் துளசியை கைது செய்ய புறப்பட்டுள்ளனர்.
வடிவழகன் துளசியிடமிருந்து விவாகரத்து பெறுவதற்காக சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT