Published : 27 Aug 2021 03:11 AM
Last Updated : 27 Aug 2021 03:11 AM
திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் ஆவணித் திருவிழாஇன்று (ஆக.27) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் இன்று முதல் வரும் செப்.5-ம் தேதி வரை 10 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஆவணித் திருவிழா, இன்று (ஆக.27) தொடங்குகிறது. செப்.7-ம் தேதி வரை 12 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று மாலையில் கொடிப்பட்டம் வீதி உலா நடைபெற்றது.
தூண்டுகை விநாயகர் கோயிலில் வைத்து பூஜை செய்யப்பட்ட கொடிப் பட்டத்தை மேள வாத்தியம் முழங்க யானை மேல் எடுத்து வரப்பட்டது. கோயில் உதவி ஆணையர் செல்வராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கரோனா ஊரடங்கால் விழா நிகழ்வுகள் அனைத்தும் கோயில் உள்பிரகாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு 10 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா தொற்று சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டும், தமிழக அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படியும், திருச்செந்தூர் கோயில் ஆவணித் திருவிழாவில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 27-ம் தேதி முதல் செப்.5-ம் தேதி முடிய கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி இல்லை. அதேநேரத்தில் கோயிலில் ஆகம விதிப்படி அனைத்து நிகழ்வுகளும் கோயில்பணியாளர்கள் மூலம் நடைபெறும்.
ஆவணித் திருவிழா முக்கிய நிகழ்வுகளை பக்தர்கள் வீட்டில் இருந்து இணையதளம் வாயிலாக (யூ-டியூப்) காணும் வகையில் கோயில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் வீட்டில் இருந்தே சுவாமி தரிசனம் செய்து, மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT