Published : 27 Aug 2021 03:11 AM
Last Updated : 27 Aug 2021 03:11 AM
பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் 4 பேருக்கு கரோனாபாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இங்குள்ள 400 மாணவ - மாணவியருக்கு பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா ஊரடங்கு தளர்வுகளை அடுத்து, கடந்த16-ம் தேதி முதல் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக மாணவ - மாணவியருக்கான விடுதிகளும் திறக்கப்பட்டன. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் கரோனா தடுப்பூசிசெலுத்திக்கொண்ட மாணவ - மாணவியர் மட்டுமே வகுப்புகளுக்கு வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மாணவி ஒருவருக்கு கடந்த 22-ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து கரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அந்த மாணவியுடன் தொடர்பில்இருந்த 100 மாணவிகளுக்கு நேற்று முன்தினம் கரோனாபரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் நேற்றுவெளியானது. அதில், 4 மாணவியருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் 4 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதனிடையே, பாளையங்கோட்டை சுகாதார ஆய்வாளர் சங்கரலிங்கம் தலைமையிலான சுகாதாரத் துறைப் பணியாளர்கள், சித்த மருத்துவக் கல்லூரி வளாகம், வகுப்பறைகள், விடுதி அறைகளில் கிருமிநாசினி தெளித்து சுகாதாரபணிகளை மேற்கொண்டனர்.
இக்கல்லூரியில் கரோனா பாதிப்புக்கு உள்ளான 5 மாணவியரும் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கல்லூரியில் மேலும் 400 மாணவ - மாணவியருக்கு கரோனா பரிசோதனைமேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 4 கல்லூரி மாணவிகளுடன், மாவட்டத்தில் மொத்தம் 17 பேருக்குகரோனா பாதிப்பு நேற்று உறுதியாகியுள்ளது.
திருச்சி மாவட்ட எஸ்பிக்கு கரோனா தொற்று
திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்திக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, திருச்சி தனியார் மருத்துவமனையில் திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி பரிசோதனை செய்துகொண்டார். அப்போது, அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவருடன் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று காரணமாக திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி விடுப்பில் உள்ளதால், பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.மணி, திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT