Published : 26 Aug 2021 03:16 AM
Last Updated : 26 Aug 2021 03:16 AM

ஜமுனாமரத்தூர் மலை கிராம மக்கள் கள்ளத்துப்பாக்கியை ஒப்படைத்தால் பொது மன்னிப்பு: தி.மலை மாவட்ட எஸ்.பி., பவன்குமார் ரெட்டி தகவல்

ஜமுனாமரத்தூர் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் பேசும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி.

திருவண்ணாமலை

ஜமுனாமரத்தூர் மலை கிராம மக்கள் கள்ளத்துப்பாக்கியை ஒப்படைத்தால் பொது மன்னிப்பு வழங்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் மலை கிராமங் களில் இருந்து அதிக பணத்தாசை காண்பித்து பள்ளி சிறுவர்களை வெளி மாவட்டங்களில் வேலைக்கு அழைத்துச் செல்வதுதெரியவந்துள்ளது. இது தொடர்பான புகாரின்பேரில், ஜமுனாமரத் தூர் காவல் நிலையத்தில் கடந்த வாரம் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மாவட்ட காவல் நிர்வாகம் சார்பில் ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்தில் விழிப்புணர்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தி.மலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி பேசும்போது, ‘‘ஜமுனாமரத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் கள்ளத் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் மனம் திருந்தி தாமாக அவற்றை ஒப்படைக்க வேண்டும். பொதுவாக ஏதாவது ஒரு இடத்தில் அல்லது பொது நபர்கள் மூலம் துப்பாக்கிகளை ஒப்படைத்தால், அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும்.

அதேபால், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பும் பெற்றோர் மீதும் இனி வழக்குப்பதிவு செய்யப்படும். குழந்தை திருமணம் செய்து வைப்பதையும் தவிர்க்க வேண்டும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், ஜமுனாமரத் தூர் ஒன்றியத்தில் உள்ள 11 கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு ‘ஹலோ திருவண்ணாமலை’ கைபேசி எண் அடங்கிய விழிப்புணர்வு போஸ்டரையும் காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி வழங்கினார். இதில், போளூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன், ஜமுனாமரத்தூர் வனச்சரகர் குணசேகரன், குழந்தை தொழிலாளர் தடுப்பு திட்ட இயக்குநர் அருள், குழந்தை திருமணம் தடுப்பு திட்ட இயக்குநர் முருகன், காவல் ஆய்வாளர் ஜனார்த்தனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x