Published : 25 Aug 2021 03:18 AM
Last Updated : 25 Aug 2021 03:18 AM
கரோனா தொற்றால் கணவரை இழந்த பெண், வேலை கேட்டு ஆட்சியரிடம் முறையிட முயன்ற வரை அரசு அலுவலர் விரட்டியதால் சலசலப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டத்துக்கு உட்பட்ட நடு சித்தஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்கொடி (32). இவரது கணவர் கோவிந்தராஜ். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கோவிந்தராஜ், கடந்த மே 7-ம் தேதி உயிரிழந்துவிட்டார்.
இதனால், இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வரும் பூங்கொடி அரசு சார்பில் ஏதாவது ஒரு வேலை வழங்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார். மேலும், கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட உள்ளதாக சிலர் கூறியுள்ளனர். இது குறித்து விசாரிக்க ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்தவர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வேலை கேட்டு முறையிட முயன்றுள்ளார்.
அப்போது, அங்கிருந்த அரசு ஊழியர், ஒருவர் பூங்கொடியை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பூங்கொடி அங்கிருந்து வெளியேறியவர் அருகே இருந்த காவலர் ஓய்வு அறையில் அமர்ந்து அழுதபடி இருந்தார்.
அங்கிருந்த காவலர்கள் மற்றும் சிலர் அவரை சமாதானம் செய்து வேறு ஒரு நாளில் வந்து ஆட்சியரை சந்திக்குமாறு அனுப்பி வைத்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT