Published : 23 Aug 2021 03:13 AM
Last Updated : 23 Aug 2021 03:13 AM

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எச்ஐவி ஆய்வகத்தில் முறைகேடு- லஞ்ச ஒழிப்பு போலீஸில் பணியாளர்கள் புகார்

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட ஆய்வகம் அமைந்துள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஒருங்கிணைந்த கலந்தாய்வு மற்றும் பரிசோதனை ஆய்வகங்களில், எடுக்கப்படும் எச்ஐவி பரிசோதனை மாதிரிகள் அனைத்தும் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைந்துள்ள ஆய்வகத்தில் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்படும்.

அவ்வாறு பிற மாவட்டங்களில் இருந்து ரத்த மாதிரிகளை கொண்டுவரும், ஊழியர்களுக்கு பயணப்படி, பணிப்படி உள்ளிட்டவற்றை வழங்குவதற்காக தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், ஆய்வகத்துக்கு வரும் ஊழியர்களுக்கு எந்தவித சலுகையும் வழங்காமல், போலியாக ரசீது காண்பித்து அந்த பணத்தை துறை அதிகாரிகள் பெற்றுக்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதேபோல ஆண்டுக்கு 2 முறை பிற மாவட்டங்களில் பணிபுரியும் ஆய்வகத்தை சேர்ந்த ஊழியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படும். அவ்வாறு பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள வரும் ஊழியர்களுக்கு பயணப்படி, பணிப்படி உணவு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும். அவையும் கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

இதற்காக 2018-19-ம் நிதியாண்டில் ரூ.75 ஆயிரமும் 2019-20-ம் நிதி ஆண்டில் ரூ.1.17 லட்சமும், 2020-21-ம் நிதி ஆண்டில் ரூ.1.25 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், சோதனை மற்றும் அளவுத் திருத்தத்துக்கான தேசிய அங்கீகார வாரியம் (NABL) சார்பாக ஆய்வகத்தை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அளிக்கப்படும் நிதியிலிருந்து ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் துறை அதிகாரி போலி கணக்குகள் மூலம் ஏமாற்றியதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

இதற்காக 2018-19-ம் நிதி ஆண்டில் ரூ.1.3 லட்சம், 2019-20 நிதியாண்டில் ரூ1.7 லட்சம், 2020-21 நிதியாண்டில் ரூ.1.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தங்களுக்கு எந்தவித சலுகையும் வழங்கவில்லை என லஞ்ச ஒழிப்பு துறைக்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து, செங்கல்பட்டு மருத்துவமனை உயர் அதிகாரியிடம் கேட்டபோது, ``இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்'' என உறுதியளித்தார்.

ஏற்கெனவே செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை கருவிகளை வீணாக்கியது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x