Published : 10 Aug 2021 04:39 PM
Last Updated : 10 Aug 2021 04:39 PM

திண்டுக்கல் மாவட்டத்தில் வேலுமணியின் உறவினர் வீட்டில் சோதனை 

எஸ்.பி.வேலுமணியின் உறவினர் வீடு.

திண்டுக்கல் 

திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை அருகே சின்னக்காம்பட்டி புதூரில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உறவினர் சதாசிவம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அதிமுக ஆட்சியில் அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தபோது, அவர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்த நிறுவனங்களுக்கு மட்டும் அதிக அளவில் ஒப்பந்த திட்டப் பணிகள் கொடுக்கப்படுவதாகவும், மற்ற ஒப்பந்த நிறுவனங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

இதற்கிடையே, அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் திமுகவுக்கு வந்த ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர், அதிமுக ஆட்சியில் எஸ்.பி.வேலுமணி ஊழல்களில் ஈடுபட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாரிடமும், மாநகராட்சி ஆணையரிடமும் சமீபத்தில் புகார் அளித்தார். தவிர, அதிமுக ஆட்சியில் ஒப்பந்தப் பணி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.1.20 கோடி மோசடி செய்துவிட்டதாக, கோவையைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவர், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 3 பேர் மீது சென்னை மாநகர போலீஸில் நேற்று (ஆக. 09) புகார் அளித்து இருந்தார்.

இந்நிலையில், கோவை சுகுணாபுரத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு, அவரது சகோதரர் வீடு உள்ளிட்ட கோவையில் 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று (ஆக. 10) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நடராஜன் தலைமையில் பத்துப் பேர் கொண்ட குழுவினர் திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை அருகே சின்னக்காம்பட்டி புதூரில் உள்ள ஓய்வு பெற்ற வணிகவரித்துறை அதிகாரி சதாசிவம் வீட்டுக்கு இன்று காலை சென்றனர்.

சோதனையிட வந்துள்ளதாகக் கூறிவிட்டு காலை 8 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். சதாசிவத்தின் மகள் மதுராந்தகி கடந்த ஏழு ஆண்டுகளாக கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் மாவட்ட வருவாய்த் துறையில் துணை ஆட்சியராகப் பணிபுரிந்து வந்துள்ளார். தற்போது திருப்பூர் மாவட்டத்தில் வருவாய்த்துறையில் நில எடுப்புப் பிரிவில் உதவி ஆட்சியராகப் பணிபுரிந்துவருகிறார்.

காரில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார்.

இவர் கோயம்புத்தூரில் பணிபுரிந்தபோது முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் சின்னக்காம்பட்டி புதூரில் உள்ள அவரது தந்தை வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

இன்று மாலை வரை 9 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை தொடர்ந்தது. வீடு முழுவதும் சோதனையிட்ட போலீஸார், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்களிலும் சோதனையில் ஈடுபட்டனர். ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்பட்டனவா என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x