Published : 09 Aug 2021 07:58 PM
Last Updated : 09 Aug 2021 07:58 PM
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதால் போலி மதுபானங்களின் விற்பனை குறைந்துள்ளதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் இருந்து சென்னசமுத்திரம் வழியாகச் செல்லும் சாலையில் கடந்த 6ஆம் தேதி அதிகாலை காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி, சோதனையிட முயன்றனர். வாகனத்தில் இருந்த இரண்டு பேர் தப்பி ஓடினர். அந்த வாகனத்தில் 100 கேன்களில் 3,500 லிட்டர் எரிசாராயம் இருந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துகருப்பன், துணை காவல் கண்காணிப்பாளர் பூரணி, காவல் ஆய்வாளர்கள் மங்கையர்கரசி (கலவை), காண்டீபன் (ஆற்காடு கிராமியம்), யுவராணி (கலால்) உள்ளிட்ட 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இதுதொடர்பாகத் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த சம்பத் மற்றும் கலவை செய்யாத்துவண்ணம் கிராமத்தைச் சேர்ந்த வினோத் என்பவரைக் கைது செய்தனர். மேலும், வினோத் மேற்பார்வையில் பதுக்கி வைத்திருந்த 397 கேன்களில் 13,895 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. சரக்கு வாகனத்துடன் மொத்தம் ரூ.85 லட்சம் மதிப்புள்ள எரிசாராய கேன்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில், பிடிபட்ட எரிசாராய கேன்களை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் இன்று (ஆக.9) பார்வையிட்டதுடன் சிறப்பாகச் செயல்பட்ட தனிப்படைக் காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களுடன் பரிசுத் தொகையை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கரோனா ஊரடங்கு காலத்தில் பெரிய அளவில் எரிசாராயம் கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 497 கேன்களில் 17,395 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ.85 லட்சமாகும்.
இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ள மொத்த கும்பல் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் இது பெரிய பறிமுதல் ஆகும். தமிழகத்தில் கடந்த ஆண்டு முழுவதும் மதுவிலக்கு தொடர்பாக 1.20 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த ஆண்டில் கடந்த 7 மாதங்களில் 1.18 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் மதுவிலக்குக் காவல் துறையினர் சார்பில் 44 சோதனைச் சாவடிகளை அமைத்துக் கண்காணித்து வருகின்றனர்.
ஊரடங்கு நேரத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அந்த நேரத்தில் போலி மதுபான விற்பனை அதிகரித்தது. அதைத் தடுக்க சோதனை நடத்தப்பட்டு அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன இப்போது, டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டதால் போலி மதுபானத் தயாரிப்பு குறைந்துள்ளது’’ என்று சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்தார்.
அப்போது, வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு, காவல் கண்காணிப்பாளர்கள் தேஷ்முக் சேகர் சஞ்சய் (ராணிப்பேட்டை), பெருமாள் (கலால்), சுப்புலட்சுமி (கலால் புலனாய்வு பிரிவு), கலால் ஏடிஎஸ்பி பெருாள் கண்ணன், கலால் புலனாய்வு டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT