Published : 08 Aug 2021 03:17 AM
Last Updated : 08 Aug 2021 03:17 AM
காவிரி டெல்டாவில் தண்ணீர் இன்றி குறுவைப் பயிர்கள் கருகத் தொடங்கியதற்கும், சம்பா சாகுபடியைத் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதற்கும் காவிரி மேலாண்மை ஆணையம் பொறுப்பேற்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் கச்சனம், ஆலத்தம்பாடி, விளக்குடி, மணலி, பொன்னிறை மற்றும் நாகை மாவட்டம் திருக்குவளை, கொக்கலாடி கிராமங்களுக்கு விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்று சென்று, அங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவைப் பயிர்களின் நிலை குறித்து ஆய்வு செய்த பி.ஆர்.பாண்டியன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக காவிரி டெல்டா மாவட்டங்களில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதை நம்பி 3.50 லட்சம்ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இதில், ஒரு லட்சம் ஏக்கரில்தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சாகுபடி பணிகளை முழுமையாக தொடர முடியாமல் போய்விட்டது. வருங்காலத்தில் முற்றிலும் குறுவைகருகி அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், 13 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்படும் சம்பா சாகுபடியை தொடங்க முடியாமல் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் செய்வதறியாது பரிதவிக்கின்றனர்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவரை சந்தித்து, கர்நாடக அணைகளை நேரில் பார்வையிட்டு, தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தினோம். அதற்கு, உடனடியாக சென்று பார்வையிட்டு ஜூலை, ஆகஸ்ட் மாதத்துக்கான தண்ணீரை பெற்றுத் தருவதாக அவர் உறுதியளித்தார். ஆனால், இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எனவே, தண்ணீர் இன்றி குறுவைப் பயிர்கள் கருகி வருவதற்கும், சம்பா சாகுபடியைத் தொடங்க முடியாமல் உள்ளதற்கும் காவிரி மேலாண்மை ஆணையமே பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT