Published : 06 Aug 2021 03:19 AM
Last Updated : 06 Aug 2021 03:19 AM
திருப்பூரில் குடிநீர் குழாய் பணிக்கு தோண்டப்பட்ட குழியில்தேங்கியிருந்த நீரில் இருசக்கரவாகனம் விழுந்து விபத்துக்குள்ளானது.
‘ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், திருப்பூர் மாநகரின் பல்வேறுஇடங்களில் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், மாநகராட்சி சார்பில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒருபகுதியாக, பழைய பேருந்து நிலையம் அருகே முத்துப்புதூர் முதல் வீதியில், கடந்த20 நாட்களாக குடிநீர் குழாய் பராமரிப்புக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேற்கண்ட பகுதி, அந்த வழியாக வந்து செல்லும் வாகனங்களுக்கு பிரதானகுறுக்கு சாலையாக இருந்து வந்தது.
அங்கு தோண்டப்பட்டிருந்த குழியில் நீர் நிறைந்திருந்தது. இந்நிலையில், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர் தவறி குழிக்குள் விழுந்ததில் லேசான காயம் ஏற்பட்டது. சக வாகன ஓட்டிகள், அவரது வாகனத்தை குழியில் இருந்து மீட்டு அனுப்பிவைத்தனர்.
இதுதொடர்பாக அப்பகுதியினர் கூறும்போது, "பகல் மற்றும் இரவு நேரங்களில் பலரும் பயன்படுத்தும் பிரதான குறுக்கு சாலை என்பதால், மாநகராட்சி சார்பில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன், குறுக்கு சாலையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இதுபோன்ற சாலைகளை செப்பனிடும் முன்பாக, ஒளிரும் வகையிலான தடுப்புகள் அமைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியம்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT