Published : 31 Jul 2021 11:17 AM
Last Updated : 31 Jul 2021 11:17 AM
கரோனா தொற்றுக் காலத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரித்துள்ளனர். குழந்தைத் திருமணங்களும் அதிகரித்துள்ளன என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரச்சார அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்த அமைப்பின் சிவகங்கை மாவட்ட அமைப்பாளர் வனராஜன், உறுப்பினர் ஜீவானந்தம் நேற்று (ஜூலை 30) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"குழந்தைத் தொழிலாளர் முறை, குழந்தைத் திருமணம், குழந்தை காணாமல் போவது போன்றவை குழந்தைக் கடத்தலைக் குறிக்கிறது. இந்தியாவில் 1976-ம் ஆண்டு கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டம் கொண்டுவந்ததில் இருந்து, இதுவரை 3.13 லட்சம் கொத்தடிமைகள் கண்டறியப்பட்டதாக அரசு கூறுகிறது.
ஆனால், அதைவிடப் பல மடங்கு கொத்தடிமைத் தொழிலாளர்கள் உள்ளனர். 2019-ம் ஆண்டு ஆள் கடத்தல் புகாரையடுத்து, தமிழகத்தில் 7 ஆயிரம் ஆயத்த ஆடைகள் நிறுவனம், நூற்பாலைகளில் ஆய்வு செய்ய தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை ஆய்வு நடத்தவில்லை.
கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட 43 சதவீதம் பேருக்கு மட்டுமே விடுதலைச் சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன. அதிலும், 26 சதவீதம் பேருக்கே இழப்பீடு கிடைத்துள்ளது. நாடு முழுவதும் 332 ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவுகள் உள்ளன. ஆனால், அவற்றுக்குப் போதிய நிதி ஒதுக்குவதில்லை. கடத்தலைத் தடுக்க தேசிய செயல் திட்டமும் இல்லை.
கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டப்படி அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுக்கள் முறையாகச் செயல்படவில்லை. கரோனா தொற்றுக் காலத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரித்துள்ளனர். குழந்தைத் திருமணங்களும் அதிகரித்துள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் 2021 மார்ச் வரை 37 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். 54 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டன.
யுனிசெஃப் அறிக்கைபடி இந்தியாவில் 4-ல் ஒரு குழந்தைக்கு 18 வயது ஆகாமலேயே திருமணம் நடக்கிறது. மேலும், தேசிய குற்ற ஆவணக் காப்பக ஆவணங்கள்படி, 2019-ம் ஆண்டு மட்டும் 2,260 குழந்தைகளும், கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 9,453 குழந்தைகளும் கடத்தப்பட்டுள்ளனர்.
ஆள்கடத்தலுக்கு எதிரான மசோதா நாடாளுமன்றத்தில் 10-க்கும் மேற்பட்ட முறை கொண்டுவரப்பட்டு நிறைவேறவில்லை. மீண்டும் இந்தக் கூட்டத்தொடரில் பட்டியலிடப்பட்டுள்ளது. அந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும்".
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT