Published : 31 Jul 2021 03:16 AM
Last Updated : 31 Jul 2021 03:16 AM

தமிழக ஊரக வளர்ச்சித்துறையில் நெருக்கடி இல்லாத அளவுக்கு நிதிநிலை நன்றாக இருக்கிறது: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்

ஆற்காடு அடுத்த நந்தியாலம் கிராமத்தில் நுண்ணுயிர் தயாரிப்பு பணியை பார்வையிட்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி.

ராணிப்பேட்டை

தமிழக ஊரக வளர்ச்சித்துறையில் நெருக்கடி என்ற நிலை இல்லாத அளவுக்கு நிதிநிலை நன்றாகவே உள்ளது என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை தொடர் பான ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். இதற்காக, ஆற்காடு அடுத்த நந்தியாலம் கிராமத்தில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடைபெற்று வரும் நுண்ணுரம் தயாரித்தல் பணி, நாற்றங்கால் பண்ணை, மண்புழு உரம் தயாரிப்பு பணிகளை அமைச்சர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

முப்பதுவெட்டி கிராமத்தில் ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ் பாரம்பரிய நெல் உற்பத்தி குழுமம் சார்பில் நடைபெற்ற விதை நெல் கண்காட்சியை அமைச்சர்கள் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கள ஆய்வில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை செயலாளர் கோபால், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் பல்லவி பல்தேவ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்கக இயக்குநர் பிரவீன் நாயர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) ஜெயராமன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் (ஆற்காடு), முனிரத்தினம் (சோளிங்கர்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘நகராட்சிகளைப் போலவே அனைத்து கிராமப் பகுதிகளிலும் குடிநீர், சாலை, கால்வாய் போன்ற வசதிகள் கிடைக்க வேண்டுமென திட்டங் களை வகுத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி வழியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்.

கடந்த ஆட்சியில் ஊரக வளர்ச்சித் துறையில் இல்லாததை இருப்பது போல் எழுதி இருந்தால் அந்த முறைகேட்டுக்கு உரிய தண்டனையை சம்பந்தப் பட்டவர்கள் நிச்சயம் அனுபவிக்க வேண்டும். ஊரக வளர்ச்சி துறையில் நெருக்கடி என்ற நிலை இல்லாத அளவுக்கு நிதி நிலை நன்றாக உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சிக் காலங்களில் தோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருந்தனர். திமுக அரசின் முயற்சியால் மட்டுமே 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை தமிழகத்தில் நடத்தி முடிக்கவே திமுக அரசு எண்ணுகிறது’’ என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x