Published : 23 Jul 2021 07:14 AM
Last Updated : 23 Jul 2021 07:14 AM

கடந்த திமுக ஆட்சியின்போது தொடங்கப்பட்டு பாதியில் நிற்கும் வன உயிரியல் பூங்கா பணிகள் புத்துயிர் பெறுமா? - பட்ஜெட்டில் நிதி ஒதுக்க திருச்சி மக்கள் எதிர்பார்ப்பு

திருச்சி

கடந்த திமுக ஆட்சியின்போது பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்ட திருச்சி வன உயிரியல் பூங்காவின் கட்டுமான பணிகள் பல ஆண்டுகளாக பாதியில் நிற்கின்றன.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எம்.ஆர்.பாளையத்தில் 75 ஏக்கர் பரப்பளவில் வன உயிரியல் பூங்கா ஏற்படுத்த கடந்த திமுக ஆட்சி காலத்தில் முடிவு செய்யப்பட்டு, இதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கின. அதைத்தொடர்ந்து கடந்த 2016-17-ல் முதற்கட்டமாக ரூ.3 கோடி செலவில் புள்ளிமான், சாம்பார் மான், சுட்டிமான், வெள்ளிமான் ஆகியவற்றை வளர்த்து காட்சிப்படுத்துவதற்காக 5 தனித்தனி வளாகங்கள், பார்வையாளர்களுக்கான நடைபாதைகள், அகழிகள், மான்களுக்காக குடிநீர் தொட்டிகள், நீரூற்றுடன்கூடிய செயற்கை மலைகள், நுழைவுவாயில் போன்றவை ஏற்படுத்தப்பட்டன. அதற்குப்பின் அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடு இல்லாததால் மீதமுள்ள வளாகங்கள், உணவகம், பார்வையாளர்கள் பகுதி, வாகன நிறுத்தம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள முடியாமல், பூங்கா பணிகள் பாதியிலேயே முடங்கின. மேலும் பல ஆண்டுகள் பராமரிப்பின்றி கிடந்ததால், ரூ.3 கோடி செலவில் அங்கு மேற்கொள்ளப்பட்டிருந்த கட்டுமானங்களும் சேதமடைந்தன.

இதையடுத்து பணி முடிந்துள்ள 4 வளாகங்களில் மீண்டும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் கடந்த அதிமுக ஆட்சியில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்த சூழலில் தற்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், இத்திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்து வருகிறது.

இதுகுறித்து திருச்சி மாநகர வளர்ச்சிக் குழுவின் (டைட்ஸ்) நிர்வாகக் குழு உறுப்பினரான ஜெகன் கூறும்போது, ‘‘திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதால், அவர்களாவது வரக்கூடிய பட்ஜெட்டில் முழுமையான நிதி ஒதுக்கீடு செய்து மீதமுள்ள கட்டுமான பணிகளுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் சுஜாதாவிடம் கேட்டபோது, ‘‘இப்பூங்காவில் மீதமுள்ள பணிகளை மேற்கொள்ள நிதி கேட்டு வனத்துறை மூலம் அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். இதில் முதற்கட்டமாக 5 வளாகங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என நம்புகிறோம்’’ என்றார்.

‘தொகுதியின் அடையாளமாக மாறும்'

மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏவான சீ.கதிரவனிடம் (திமுக) கேட்டபோது, ‘‘பாதியில் நிற்கும் இத்திட்டம் குறித்து அமைச்சர் கே.என்.நேரு மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம். வரும் பட்ஜெட்டில் இத்திட்டத்துக்கான முழுமையான நிதியைப் பெற முயற்சி செய்து வருகிறோம். இப்பூங்கா செயல்பாட்டுக்கு வந்தால், மண்ணச்சநல்லூர் தொகுதியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இது மாறும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x