Published : 20 Jul 2021 06:38 PM
Last Updated : 20 Jul 2021 06:38 PM
சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை அருகே கவிச் சக்கரவர்த்தி கம்பருக்குத் தமிழக அரசு மணி மண்டபம் கட்ட வேண்டுமெனத் தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கம்ப ராமாயணத்தை எழுதி அழியாப் புகழ் பெற்ற கவிச் சக்கரவர்த்தி கம்பரின் சமாதி, சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை அருகே கருதுப்பட்டியில் உள்ளது. கம்பர், தஞ்சை மாவட்டம் தேரெழுந்தூரில் பிறந்தவர். அவர் வாழ்ந்த காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு எனக் கூறப்படுகிறது. தான் எழுதிய ராமாயணத்தை கி.பி. 886-ம் ஆண்டு திருவெண்ணெய் நல்லூரில் அரங்கேற்றினார். அதன்பிறகே கவிச் சக்கரவர்த்தி என அழைக்கப்பட்டார்.
சில காரணங்களால் சோழ நாட்டிலிருந்து வெளியேறிய அவர், நாடோடியாய்ப் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்து, இறுதியாக நாட்டரசன்கோட்டை பகுதிக்கு வந்தார். அங்கு மாடு மேய்க்கும் சிறுவனின் கவிநயம் மிகுந்த பேச்சால் கவரப்பட்டு அந்த ஊரிலேயே தன் இறுதிக் காலத்தைக் கழித்தார்.
கம்பர் மறைந்த இடத்தில் சிறிய அளவில் சமாதி உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். மேலும் இப்பகுதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு கம்பர் சமாதியில் இருக்கும் மண்ணை எடுத்து நாக்கில் வைப்பது வழக்கம். இதன் மூலம் நல்ல தமிழாற்றல் மிகுந்த குழந்தையாக வளரும் என்பது நம்பிக்கை. கம்பர் சமாதி தற்போது தனியார் இடத்தில் உள்ளது. அரசு சார்பில் கம்பருக்கு மணி மண்டபமும் இல்லை. அரசு விழாவும் நடத்துவதில்லை. இதனால் தமிழ் ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்துத் தமிழ் ஆர்வலர்கள் சிலர் கூறும்போது, ''தமிழுக்கு அழியாப் புகழ் சேர்த்த கம்பருக்கு வெளிநாடுகள், காரைக்குடி உள்ளிட்ட பல ஊர்களில் தனியார் சார்பில் விழாக்கள் நடத்தப்படுகின்றன. ஆனால், அவர் மறைந்த ஊரான கருதுப்பட்டியில் பெரிய அளவில் விழாக்கள் நடப்பதில்லை.
இதனால் கம்பரின் தமிழ்ப் பற்று, தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டு போன்றவை உள்ளூர் மக்களுக்கே தெரியாமல் போய்விடும் நிலை உள்ளது. தமிழறிஞர்கள், கவிஞர்கள், விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவிடங்கள் தனியார் இடங்களில் இருந்தாலும், அவர்களுக்குத் தனியாக அரசு சார்பில், அரசு நிலத்தில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கம்பருக்கு மணி மண்டபம் கட்டி, அரசு விழா நடத்த வேண்டும். ஏற்கெனவே தமிழ்க் குடிமகன் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தபோது கம்பருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என அறிவித்தார். ஆனால், பல ஆண்டுகளாகியும் கட்டப்படவில்லை'' என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT