Published : 20 Jul 2021 03:15 AM
Last Updated : 20 Jul 2021 03:15 AM
தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் வருவாய் உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ் ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.
திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 43,803 மனுக்கள் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்துக்கு வந்துள்ளது. அதில் 13,462 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
பட்டா வழங்குதல், சர்வே செய்வதில் இருக்கும் தாமதத்தை உடனடியாக நிவர்த்தி செய்யவும், வாரம்தோறும் குறைகளை நிவர்த்தி செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் உழவர் பாதுகாப்பு திட்டத்தை விரிவுபடுத்தவும், இத்திட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தகுந்தவிழிப்புணர்வு ஏற்படுத்தி பலன்களை அதிகரிக்கவும் ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டும் அதற்கான தாலுகா உள்ளிட்ட வருவாய் கோட்டங்கள் பிரிக்கப்படாமல் இருக்கிறது. அதற்கான தகுந்த ஆணை விரைவில் வெளியிடப்படும்.
3 ஆயிரம் பணியிடங்கள்
வருவாய்த்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சியிடம் கேட்டுள்ளோம். தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் வருவாய் உதவியாளர் பணியிடங்கள் கரோனா காலத்தால் நிரப்பப்படாமல் உள்ளது. விரைவில் இப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
சர்வே செய்யப்படாத இடங்களில் நீதிமன்ற ஆணைப்படி உரிமம்பெற்ற சர்வேயர் மூலம் அளவீடு செய்து, மனு செய்தால் 15 நாட்களுக்குள் பட்டா வழங்க அறிவுறுத்தப்படும். இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் அனைத்தும் 3 மாதத்துக்குள் வருவாய்த்துறை ஆவணங்களில் ஏற்றப்பட்டு கம்ப்யூட்டர்பட்டாவாக வழங்கப்படும். அரசுவளர்ச்சி திட்டங்களுக்காக நிலங்களை கையகப்படுத்தும்போது முன்னுரிமை கொடுத்து வழங்கப்படும் என்றார்.
உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் வருவாய்த்துறை தொடர்பாக பெறப்பட்ட 7,740 மனுக்களில் 751 பேருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவி தொகை, 580 பேருக்கு ரூ.1.29 கோடி மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டா, 33 பேருக்கு நிலஉரிமைப் பட்டா, பெயர் மாற்ற உத்தரவு, 49 பேருக்கு புதிய ரேஷன் அட்டை உள்ளிட்டவற்றை வருவாய்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வழங்கினார்.
ஆய்வுக் கூட்டத்தில் தமிழக வருவாய்த்துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், நில நிர்வாக ஆணையர் நாகராஜன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு, எம்எல்ஏக்கள் அப்துல்வகாப், ரூபிமனோகரன், நயினார் நாகேந்திரன், ராஜா, சதன்திருமலைக்குமார் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
வள்ளியூர் வருவாய் கோட்டம் உருவாக்க வலியுறுத்தல் ஆய்வு கூட்டத்துக்கு தலைமை வகித்து சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பேசியதாவது: தமிழகத்தில் காலியாகவுள்ள 2,726 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வட்டாட்சியர்களுக்கு அரசு செல்போன் வழங்கியுள்ள நிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவருக்கும் செல்போன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சொந்த கட்டிடம் இல்லாத கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களுக்கு கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தாலுகாவுக்கு ஒரு ஆதார் மையம் மட்டுமேஉள்ளது. இ.சேவை மையங்கள் அதிகம் உள்ளன. எனவே அனைத்து இ.சேவை மையங்களிலும் ஆதார் சேவையை கொண்டுவர வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர், பணகுடி, பழவூர் ஆகிய குறுவட்டங்களை இணைத்து பணகுடியை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகாவும், வள்ளியூர், நாங்குநேரி, ராதாபுரம் தாலுகாக்களை ஒருங்கிணைத்து வள்ளியூரை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டமும் உருவாக்க வேண்டும் என்றார். |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT