Published : 19 Jul 2021 03:14 AM
Last Updated : 19 Jul 2021 03:14 AM

சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் மேகேதாட்டு அணைக்கு எதிராக தீர்மானம்: இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழுக் கூட்டத்தில் முடிவு

திருவாரூர்

ஆக.15 சுதந்திர தினத்தன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டங்களில் மேகேதாட்டுவில் அணை கட்டக்கூடாது என தீர்மானம் நிறைவேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது.

இதில், பங்கேற்ற மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக நீர்வளத் துறை அமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி குழுவினர் டெல்லிக்குச் சென்றபோது, மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், கர்நாடக முதல்வர் அணையை கட்டியே தீருவோம் என இரு மாநிலங்களுக்கு இடையே நிலவிவரும் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து பேசி வருகிறார். மேலும், தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே யார்கோலில் அணை கட்டப்பட்டுள்ளது.

இவற்றைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஜூலை 26-ம் தேதி ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் ஆக.15-ம் தேதி நடைபெறவுள்ள சுதந்திர தின கிராம சபைக் கூட்டங்களில், மேகேதாட்டுவில் அணை கட்டக்கூடாது, யார்கோல் அணையை உடைக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் 6 கோடி பேருக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் 2 தவணை கரோனா தடுப்பூசிகளை போட வேண்டிய நிலையில், இதுவரை 1.70 கோடி தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. எனவே, தமிழகத்துக்கு உரிய தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

முன்னதாக, கூட்டத்துக்கு கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் பழனிசாமி தலைமை வகித்தார். எம்.பி எம்.செல்வராஜ், எம்எல்ஏ க.மாரிமுத்து, மாவட்டச் செயலாளர் சிவபுண்ணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மூ.வீரபாண்டியன் எழுதிய ‘ஒன்றியம் என்ற சொல்' என்ற நூலை ஏஐடியுசி பொதுச் செயலாளர் மூர்த்தி வெளியிட, தமிழக விவசாயத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் பெரியசாமி பெற்றுக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x