Published : 14 Jul 2021 03:13 AM
Last Updated : 14 Jul 2021 03:13 AM

ஒருவாரம் முழுமையாக வேலைக்கு வரும் தொழிலாளர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசம்: பனியன் நிறுவன ஒப்பந்ததாரர்கள் நூதன அறிவிப்பு

திருப்பூர்

பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ஒருவாரம் முழுமையாக வேலைக்கு வரும் தொழிலாளர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என, திருப்பூர் பனியன் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர்கள் வெளியிட்டுள்ள நூதன அறிவிப்பு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் நாளுக்குநாள் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. திருப்பூரில் பெட்ரோல் விலை ரூ.102-க்கு மேல் உயர்ந்துள்ளது. இந்நிலையில், திருப்பூர் வாவிபாளையத்தைச் சேர்ந்த பனியன் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர்கள் ‘ஓவர்லாக், பேட்லாக் தையல் இயந்திர தொழிலாளர்கள், ஒருவாரம் தொடர்ந்து வேலை செய்தால், இரண்டு லிட்டர் பெட்ரோல் இலவசம்’ என ஒரு அட்டையில் எழுதி, தங்களது அலைபேசி எண்ணையும் இணைத்து, மின் கம்பங்களில் கட்டி வைத்துள்ளனர். இந்த விளம்பரப் பலகை, தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதுதொடர்பாக பனியன் நிறுவன ஒப்பந்ததாரர்கள் ஈஸ்வரன், ஜெயபிரகாஷ் ஆகியோர் கூறும்போது ‘‘கரோனா ஊரடங்குக்கு பிறகு, புதிய ஆர்டர்கள் வரத்தொடங்கி உள்ளன. பின்னலாடை நிறுவனங்களில் தொழிலாளர்களின் தேவை அதிகரித்துள்ளது. எனவே வாரம் முழுவதும் விடுப்பின்றி எங்கள் நிறுவனத்தில் பணியாற்றினால், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்க உள்ளோம். இதன்மூலம் எங்களுக்கும் ஆதாயம் உள்ளது. தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றினால், அதன் மூலம் ஆர்டர்களை உரிய நேரத்தில் முடிக்க முடியும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x