Published : 10 Jul 2021 03:15 AM
Last Updated : 10 Jul 2021 03:15 AM
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில், நீலகிரி மலை ரயில் நிறுவனத்துக்காக 2 மலை ரயில் இன்ஜின்கள் தயாரிக்கப் பட்டு வருகின்றன. இதில் ஒரு இன்ஜினின் சோதனை ஓட்டம் அடுத்த மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள், மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுவார்கள். ஆங்கிலேயர் ஆட் சிக் காலத்தில் 1899-ல் மேட்டுப் பாளையம்- குன்னூர் இடையே தொடங்கப்பட்ட மலை ரயில் சேவை, 1909 அக்.15 முதல் ஊட்டி வரை நீட்டிக்கப்பட்டது. இதனால், ஆண்டுதோறும் அக்.15-ம் தேதி நீலகிரி மலை ரயில் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நிகழாண்டு 112-வது ஆண்டை நீலகிரி மலை ரயில் கொண் டாடவுள்ள நிலையில், நீலகிரி மலை ரயில் நிறுவனத்துக்காக திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் புதிதாக 2 மலை ரயில் இன்ஜின்கள் தயாராகி வருகின்றன.
பொன்மலை ரயில்வே பணி மனையின் தலைமை மேலாளர் ஷியாமதார் ராம், உற்பத்திப் பிரிவின் துணைத் தலைமை இயந்திரவியல் பொறியாளர் எஸ்.கந்தசாமி ஆலோசனையின்படி, உற்பத்திப் பிரிவு உதவி மேலாளர் பி.சுப்பிரமணியன், முதுநிலைப் பிரிவு அலுவலர் பி.பத்மகுமார் ஆகியோர் மேற்பார்வையில் 60-க்கும் அதிகமான தொழிலாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர்.
இதுகுறித்து ரயில்வே பணி மனை அலுவலர்கள் கூறியது: பொன்மலை ரயில்வே பணி மனையில் 2011 முதல் 2014 வரையிலான காலத்தில் 4 மலை ரயில் இன்ஜின்கள் தயாரித்து அளிக்கப்பட்டுள்ளன. தற்போது மேலும் 2 மலை ரயில் இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ரூ.8.8 கோடியில் நிலக்கரி மூலம் எரியூட்டப்பட்டு, நீராவி மூலம் இயங்கும் வகையிலான ரயில் இன்ஜின் தயாரிக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் பணி முடிந்த பிறகு ரூ.9 கோடி மதிப்பில் பர்னஸ் எண்ணெய் மூலம் எரியூட்டப்பட்டு, நீராவி மூலம் இயக்கப்படும் மற்றொரு ரயில் இன்ஜின் தயாரிக்கப்படவுள்ளது.
தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ரயில் இன்ஜினில் பயன்படுத்தப்படவுள்ள 3,600-க்கும் அதிகமான உதிரிப்பாகங்களில் 1,200 உதிரிப் பாகங்கள் பொன் மலை ரயில்வே பணிமனை வளாகத்திலேயே தயாரிக்கப்பட் டவை. எஞ்சிய 2,400 உதிரிப் பாகங்கள் பொன்மலை ரயில்வே பணிமனை பொறியாளர்களின் ஆலோசனைப்படி நாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் தயாரித்து அளித்தவை. இந்த சிறப்பான முன்னெடுப்பை நாட்டிலேயே முதல் முறையாக பொன்மலை ரயில்வே பணிமனை மேற்கொண்டுள்ளது.
முதல் இன்ஜினின் சோதனை ஓட்டம்அடுத்த மாதம் நடத்தப்பட்டு, அதன்பின் நீலகிரி மலை ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT