Published : 05 Jun 2014 03:33 PM
Last Updated : 05 Jun 2014 03:33 PM

திமுக மாவட்ட நிர்வாகங்களை மாற்ற முடிவு: தலைமைக்கு பரிந்துரைக்க 6 பேர் குழு அமைப்பு

திமுகவில் அமைப்பு ரீதியான மாவட்டங்களை அதிகரிப்ப தற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து தலைமைக்கு பரிந்துரை செய்ய 6 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் பரிந்துரைப்படி, மாவட்ட எல்லைகள் வரையறுக்கப்பட்டு கூடுதல் மாவட்டங்கள் ஏற்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 39 தொகுதிகளில் போட்டியிட்டு படுதோல்வியைத் தழுவியது. 34 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியடைந்தனர். 2 தொகுதிகளில் டெபாசிட்டையும் பறிகொடுத்தனர்.

இந்தத் தோல்விக்கு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் உட்கட்சிப் பிரச்சினையில் கோஷ்டிகளாகப் பிரிந்த நிர்வாகிகளே காரணம் என்று திமுக தலைமைக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. பதவிப் பிரச்சினை காரணமாகவே கோஷ்டிப் பிரச்சினைகள் ஏற்பட்டதாக, திமுக தலைமைக்கு தெரியவந்துள்ளது. இதனால் கட்சியில் பல மாற்றங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டது.

கடந்த 2-ம் தேதி கருணாநிதி தலைமையில் நடந்த திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்தும், எதிர்காலத்தில் கட்சியை வலுப்படுத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. மாவட்டங்களில் கோஷ்டிப் பிரச்சினைகளை தீர்க்க, மாவட்ட நிர்வாகங்களை இன்னும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து ஆராய்ந்து பரிந்துரை செய்ய ஒரு குழு அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதற்கு அடுத்தநாள் நடந்த தனது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாநிதி, ‘‘திமுகவின் கட்டுக்கோப்பில் பழுது ஏற்பட்டு இருப்பதாக சிலர் கருத்து தெரிவித்தனர். உயர்நிலைக் குழு கூட்டத்தில் இது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த அதிரடி முடிவுகளை அறிவிப்போம். அந்த முடிவுகளுக்குப் பிறகு திமுக கூர் தீட்டப்பட்ட வாளாகவும், பட்டை தீட்டப்பட்ட வைரமாகவும் ஜொலிக்கும்’’ என்றார். இதனால், திமுகவில் அதிரடி மாற்றங்கள் வரும் என்றும், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள் என்றும் செய்திகள் வந்தன.

இந்நிலையில், கட்சியின் மாவட்ட நிர்வாகங்களை வலுப்படுத்த 6 பேர் கொண்ட குழுவை திமுக தலைமை அமைத்துள்ளது. இதுகுறித்து திமுக தலைமை அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த ஜூன் 2-ம் தேதி நடந்த திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுவில் நிறைவேற்றப்பட்ட 6-வது தீர்மானத்தையொட்டி, மாவட்டக் கழக நிர்வாகங்களை எளிமையாக்க, மேலும் வலிமைப்படுத்த ஏற்ற வகையில் தேவையான சாத்தியக் கூறுகளை ஆய்ந்து முடிவெடுக்கவும், தலைமைக்கு பரிந்துரை செய்ய வும் 6 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கலசப் பாக்கம் பெ.சு.திருவேங்கடம், திருத்துறைப்பூண்டி டி.எஸ்.கல்யாணசுந்தரம், ஒரத்தநாடு ராஜமாணிக்கம், தங்கம் தென்னரசு, வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஈரோடு எஸ்.எல்.டி. சச்சிதானந்தம் ஆகியோர் அந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தக் குழுவினர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கருத்துக்களை கேட்டறிந்து, மாவட்டங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கட்சி நிர்வாக ரீதியாக மாவட்டங்களைப் பிரித்து, புதிய மாவட்டங்கள், ஒன்றியங்கள் ஏற்படுத்துவது குறித்தும் கட்சித் தலைமைக்கு அறிக்கை அளிக்கும் என திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x