Published : 22 Jun 2014 12:49 PM
Last Updated : 22 Jun 2014 12:49 PM

மருத்துவம் படிக்க முடியாது; பொறியியல் படிக்கலாம்: இலங்கை அகதிகள் முகாம் மாணவியின் சோகம்

இலங்கை அகதிகள் முகாமில் தங்கி தமிழகத்தில் கல்வி பயின்றவர்களுக்கு, இந்திய குடியுரிமை இல்லை என்பதால், தகுதி அடிப்படையில் மருத்துவம் படிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. அதே நேரத்தில், அவர்கள் பொறியியல் கலந்தாய்வுகளில் பங்கேற்று, படிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த பாரபட்சம் வருத்தத்தை ஏற்படுத்துவதாக அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ராஜா என்பவரது மகள் நந்தினி, இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1170 மதிப்பெண் பெற்றுள்ளார். மருத்துவப் படிப்பு படிக்க விரும்பிய நந்தினி, அதற்கான கட் ஆப் மதிப்பெண் 197.50 இருந்ததால், கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்தார்.

மருத்துவ கலந்தாய்வு

அவர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் என்பதால், இந்திய குடியுரிமை அவருக்கு இல்லை என்ற காரணத்தால் அவருக்கு கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப் படவில்லை என மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து ‘தி இந்து’ நாளிதழில் நேற்று (21ம் தேதி) செய்தி வெளியானது.

இந்நிலையில் சனிக்கிழமை காலை கலந்தாய்வில் பக்கேற்பதற்காக நந்தினி மற்றும் அவரது தந்தை ராஜா ஆகியோர் சென்றனர். அங்கிருந்த அதிகாரிகள், “இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால், உங்களுக்கு இந்திய குடியுரிமை இல்லை. அதனால், விதிமுறைகளின்படி, நீங்கள் கலந்தாய்வில் பங்கேற்க முடியாது’ எனத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இருவரும் ஈரோடு திரும்பினர்.

நம்பிக்கை உள்ளது

இது குறித்து நந்தினி கூறியதாவது: மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்ததால், அகதிகள் மறுவாழ்வு ஆணைய அலுவலகத்துக்குச் சென்று முறையிட சென்றோம். இன்று விடுமுறை என்பதால் அலுவலகம் பூட்டி இருந்தது அதனால் ஊர் திரும்பி விட்டோம். மருத்துவம் படிக்க வேண்டும் என்ற விருப்பத்தால், பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்பதற்காககூட நான் விண்ணப்பிக்கவில்லை. இந்நிலையில், எனது முறையீட்டை தமிழக அரசு கருணையுடன் பரிசீலித்து, மருத்துவ கல்வி வழங்க வாய்ப்பு அளிக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொறியியல் படிக்கலாம்

இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்று, மருத்துவக் கல்வி படிக்கும் வாய்ப்பு விதிமுறைகளின்படி இல்லை எனும் நிலையில், தமிழக அரசு அவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு வழங்கியுள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் வி. ரைமண்ட் உத்தரியராஜ் கூறுகையில், “தமிழகத்தில் படித்த மாணவர்களுக்கு பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்படுகிறது. இலங்கை அகதிகள் முகாமில் இருந்து தமிழக பள்ளிகளில் படித்திருந்தால் அவர்கள், பொறியியல் கல்வி பயில முடியும்” என தெரிவித்தார். இதன்படி, மாணவி நந்தினி பொறியியல் கல்வி பயில விண்ணப்பிக்க முடியும். ஆனால், அதற்கான காலக்கெடு முடிந்துவிட்ட நிலையில், தற்போது அந்த வாய்ப்பும் பறிபோ யுள்ளது. அரசின் இந்த விதிமுறை வருத்தமளிப்பதாக இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்களும் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x