Published : 29 Jun 2021 06:13 AM
Last Updated : 29 Jun 2021 06:13 AM

நெல்லை - தென்காசி, நெல்லை - தூத்துக்குடி வழித்தட பேருந்துகளில் கடும் கூட்டம்; 50 சதவீத பயணிகள் என்ற அரசின் உத்தரவு முதல்நாளே மீறல்: ஜவுளி உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறப்பால் களைகட்டிய கடைவீதிகள்

ஊரடங்கு தளர்வில் நேற்று பேருந்துகள் இயக்கப்பட்டதில் முதல்நாளே அரசின் உத்தரவு மீறப்பட்டு, நெல்லை- தென்காசி, நெல்லை- தூத்துக்குடி வழித்தட பேருந்துகளில் அதிக பயணிகள் ஏற்றிச்செல்லப்பட்டனர். ஜவுளி உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டதால் கடைவீதிகள் மீண்டும் களைகட்டின.

கரோனா ஊரடங்கு தளர்வை அடுத்து அரசுப் பேருந்துகள் நேற்றுமுதல் இயக்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்தில் 7 பணிமனைகளில் இருந்து 116 நகரப் பேருந்துகள், 124 புறநகர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நகர பேருந்துகளில் 99 சாதாரண கட்டண பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமலும், மாற்றுத் திறனாளிகள் மற்றும்அவர்தம் உதவியாளர்கள், திருநங்கைகள் அடையாள அட்டையுடன் கட்டணமில்லாமல் பயணச் சீட்டு பெற்றுக்கொண்டும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்துக்குள் இதர மண்டலங்களில் இருந்து 60 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 34 தொலைதூர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வண்ணார்பேட்டையில் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து ஆட்சியர் வே.விஷ்ணு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறும்போது, “பயணிகள் பயன்பாட்டினை பொருத்து பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி மண்டலத்தில் பணிபுரியும் 2,465 பணியாளர்களில், 2,065 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இது 83 சதவீதம்” என்றார்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்றுகாலை முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கியதால் பேருந்து நிலையங்கள் மீண்டும் களைகட்டத் தொடங்கின. நேற்று 60 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் தென்காசி- திருநெல்வேலி வழித்தடத்தில் கூட்டம் வழக்கம்போல அலைமோதியது. 50 சதவீதஇருக்கைகளில் மட்டும் அமர்ந்துபயணிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இருக்கைகள் அனைத்தும் நிரம்பி, பயணிகள் நின்றுகொண்டும் பயணம் செய்தனர். இந்த வழித்தடத்தில் காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். ஊரடங்குதளர்வில் பல்வேறு கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் நகர் பகுதிகளில் கடைவீதிகள் களைகட்டத் தொடங்கின.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழக 7 பணிமனைகளில் இருந்து மொத்தம் நேற்று 240 பேருந்துகள் (80 சதவீதம்) இயக்கப்பட்டன. அனைத்து பகுதிகளுக்கும் நகர பேருந்துகள் இயக்கப்பட்டன. தூத்துக்குடியில் இருந்து மதுரை,திருநெல்வேலி, தென்காசி, கோவில்பட்டி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டன. நேற்று முகூர்த்த தினம் என்பதால் பெரும்பாலான பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. குறிப்பாக தூத்துக்குடி- திருநெல்வேலி இடையே இயக்கப்பட்ட பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.

தூத்துக்குடியில் இருந்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் 20 விரைவு பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டன. இதில் 18 பேருந்துகள் வழக்கமான வழித்தடம் வழியாகவும், ஒரு பேருந்து ராமநாதபுரம் உள்ளிட்ட கிழக்கு கடற்கரைச் சாலை வழியாகவும் சென்னைக்கு இயக்கப்பட்டது. ஒரு பேருந்து வேலூருக்கு இயக்கப்பட்டது. ஜவுளிக் கடைகள் மற்றும் நகைக்கடைகளும் திறக்கப்பட்டன.

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டன. குமரி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் அரசு பேருந்துகள் களியக்காவிளை எல்லையுடன் நிறுத்தப்பட்டன. இவற்றில் பயணிகள் மிகவும்குறைந்த அளவிலேயே பயணித்தனர்.

வடசேரி பேருந்து நிலையத்தில் செயல்பட்ட தற்காலிக சந்தை, மீண்டும் கனகமூலம் சந்தைக்கு மாற்றப்பட்டது. திருநெல்வேலி, மதுரை, சென்னை மற்றும் அனுமதியுள்ள வெளியூர்களுக்கு நாகர்கோவிலில் இருந்து பேருந்துகள் இயங்கின. கரோனா தொற்று குறையாத கோவை, ஈரோடு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயங்கவில்லை. நாகர்கோவில் மீனாட்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து உள்ளூர் பேருந்துகள் எப்போதும் போல் இயங்கின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x