Published : 25 Jun 2021 09:33 PM
Last Updated : 25 Jun 2021 09:33 PM
பல தேர்தல்களைச் சந்தித்தும் அமமுகவை மக்கள் ஏற்கவில்லை. மு.க.ஸ்டாலின் தமிழகத்தை நல்வழிப்படுத்தக்கூடிய தலைவராக இருப்பதால் திமுகவில் இணைந்தேன் என அமமுகவில் இருந்து திமுகவில் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ மாரியப்பன் கென்னடி தெரிவித்தார்.
மாரியப்பன் கென்னடி, அதிமுக சார்பில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மானாமதுரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். டிடிவி தினகரன் ஆதரவாளராக மாறியதால் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அமமுகவில் மாநில அம்மா பேரவைச் செயலாளர், செய்தித் தொடர்பாளராக இருந்தார்.
அவர் அமமுக சார்பில் மானாமதுரை தொகுதியில் 2019-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல், சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றார். இந்நிலையில் இன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இதுகுறித்து மாரியப்பன் கென்னடி கூறும்போது, ''அதிமுகவில் நாங்கள் பழனிசாமியை முதல்வராக்கினோம். ஆனால், அவர் எதிர்த்து வாக்களித்தவர்களைச் சேர்த்துக்கொண்டு, ஆதரித்து வாக்களித்த எங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார். அதன் பிறகு அமமுகவில் பயணித்தேன். அமமுகவில் மாநிலப் பொறுப்புகளில் இருந்தேன். ஆனால், ஒரு பயனும் இல்லை.
இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல்களைச் சந்தித்தும் அமமுகவை மக்கள் ஏற்கவில்லை. அவர்கள் திமுக, அதிமுகவுக்குத்தான் வாய்ப்பு கொடுக்கின்றனர். அதிமுக, அமமுகவில் விசுவாசமாக இருந்தும் பயனில்லை. மேலும் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை நல்வழிப்படுத்தக்கூடிய தலைவராக இருப்பதால் திமுகவில் இணைந்தேன்'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT