Published : 25 Jun 2021 03:14 AM
Last Updated : 25 Jun 2021 03:14 AM

போலி கணக்கு தொடங்கி முகநூலில் பண மோசடி செய்யும் கும்பல்: பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க காவல் துறை அறிவுறுத்தல்

திருவாரூர்

முகநூலில் வேறு பெயர்களில் போலிக் கணக்கு தொடங்கி, சம்பந்தப்பட்ட நபரின் நண்பர்களிடம் பணம் வசூலிக்கும் மோசடி கும்பலிடம் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.

இணையதளங்கள் வாயிலாக பண மோசடி நடைபெறுவது சமீபகாலமாக அதிகரித்து வரும் நிலையில், தற்போது சமூக வலைதளமான முகநூல் வழியாகவும் சிலர் நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளது.

ஒருவரின் முகநூல் பக்கத்தில் உள்ள புகைப்படத்தையும், தகவல்களையும் எடுத்துக்கொண்டு, அதே பெயரில் வேறு முகநூல் கணக்கை போலியாக உருவாக்கும் நபர்கள், அந்த நபரின் நண்பர்களுக்கு நட்பு அழைப்பு (ஃபிரண்ட் ரிக்வெஸ்ட்) விடுத்து, நண்பர்களாக்கிக் கொள்கின்றனர். பின்னர், தான் நெருக்கடியான சூழலில் உள்ளதாக சம்பந்தப்பட்ட நபர் அனுப்புவதுபோல முகநூல் வழியாக குறுந்தகவல் அனுப்பி பணம் வசூலித்து ஏமாற்றுகின்றனர்.

இதுகுறித்து மன்னார்குடியைச் சேர்ந்த ஜான்சன் என்பவர் கூறியது: அண்மையில், எனது நண்பர் ஒருவரின் பெயரில் இருந்த முகநூல் கணக்கிலிருந்து, தனக்கு உடனடியாக ரூ.10,000 தேவைப்படுவதால் நெட்பேங்கிங் வழியாக அனுப்பும்படியும், சில மணிநேரத்தில் திருப்பித் தந்துவிடுவதாகவும் கூறி, எனது முகநூல் கணக்குக்கு குறுந்தகவல் வந்தது. என்னிடம் கடன் கேட்கும் அளவுக்கு அந்த நண்பருடன் பழக்கமில்லை என்பதால் சந்தேகமடைந்த நான், போலி நபரின் வங்கிக் கணக்கைக் கேட்டு வாங்கி, அதில் உள்ள ஐஎஃப்எஸ்சி எண்ணை வைத்து பார்த்தபோது, அது டெல்லியில் உள்ள பேடிஎம் வங்கிக் கணக்கு என்பது தெரியவந்தது. இதுகுறித்து, உடனடியாக சம்பந்தப்பட்ட நண்பருக்கு தகவல் தெரிவித்து சுதாரிக்கச் செய்தேன் என்றார்.

இதுகுறித்து, திருவாரூர் மாவட்ட காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவுக்கு ஆலோசனை வழங்கிவரும் தொழில்நுட்ப வல்லுநர் பிரகதீஸ் கூறியது: முகநூலில் ஏற்கெனவே நண்பர்களாக இருப்பவர்களிடம் இருந்து, புதிதாக ஃபிரெண்ட் ரிக்வெஸ்ட் வந்தால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்தக் கணக்கு சமீபத்தில் தொடங்கப்பட்டதாக இருந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட நண்பரை தொடர்புகொண்டு விசாரித்து, இதுபோன்ற மோசடிகளை தவிர்த்துவிட முடியும்.

வடமாநிலங்களில் இருந்துதான் இதுபோன்ற மோசடி நபர்கள் தமிழகத்தில் உள்ளவர்களை குறிவைக்கின்றனர். அவர்கள் தங்களின் வங்கிக் கணக்குகளில் உண்மையான முகவரியைக் கொடுப்பதில்லை. ரூ.1,000 அல்லது ரூ.2,000 என சிறியளவில் பணம் கொடுத்து ஏமாறுபவர்கள் புகார் தெரிவிக்க ஆர்வம் காட்டுவதில்லை என்பதால், மோசடி நபர்கள் தப்பிவிடுகின்றனர். பெரிய தொகையை ஏமாற்றும் போலி நபர்கள் உடனடியாக அந்த வங்கிக் கணக்கையும் முடக்கிவிடுகின்றனர். இதுகுறித்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதற்காகவே சைபர் கிரைம் அமைப்பை காவல் துறை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

இதுகுறித்து திருவாரூர் சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி கூறியது: முகநூல் பயன்படுத்தும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். முகநூல் கணக்கு தவறுதலாகப் பயன்படுத்தப்படுவது தெரியவந்தால், அந்த யுஆர்எல் முகவரியை குறிப்பிட்டு, நேஷனல் சைபர் கிரைம் ரிப்போர்டிங் போர்டல்-ன் இணையதளத்திலோ அல்லது மாவட்டந்தோறும் செயல்படும் சைபர் கிரைம் அலுவலகத்திலோ புகார் அளிக்கலாம். அதன் மூலம் மோசடி நபர்களை உடனடியாக கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x