Published : 25 Jun 2021 03:15 AM
Last Updated : 25 Jun 2021 03:15 AM
திருநெல்வேலி மாவட்டத்தில் இவ்வாண்டுக்கான கார் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரம்காட்டி வருகிறார்கள். மொத்தம்,9,700 ஹெக்டேரில் நெல் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
மாவட்டத்தில் பிரதானமாக கார், பிசான சாகுபடிகளில் விவசாயிகள் ஆண்டாண்டு காலமாக ஈடுபட்டு வருகிறார்கள். தண்ணீர் கிடைப்பதைப் பொருத்து கோடை நெல் சாகுபடியும் ஆங்காங்கே நடைபெறுவதுண்டு. கார் சாகுபடிக்காக ஆண்டில் ஜூன் முதல் வாரத்தில் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதும் வழக்கமாக இருந்தது.
இவ்வாறு குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் திறந்துவிடுவதால் சாகுபடி செய்யும் பயிர்கள் பருவமழைக்கு தப்பிவிடும். மழையால் ஏற்படும் சேதாரங்களை தவிர்த்துவிடலாம் என்பதால் ஆண்டுதோறும் அணைகளில் இருந்து குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.
ஆனால், இந்த கோரிக்கை கடந்த பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை. காலம் கடந்துஅணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் விவசாயிகள் சாகுபடியில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. பெரும்பாலான விவசாயிகள் கடந்த பல ஆண்டுகளாக கார் சாகுபடியில் ஈடுபடாமல் பிசான சாகுபடியில் மட்டுமே ஈடுபட்டு வந்தனர்.
நடப்பாண்டு அணைகளில் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால், உரியகாலத்தில் தண்ணீர் திறக்க அரசு நடவடிக்கை எடுத்தது. ஜூன் முதல் வாரத்தில் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு அந்தந்த கால்வாய்கள் மூலம் தண்ணீர் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது.
தண்ணீர் செழிப்பாக கிடைப்பதால் மாவட்டத்தில் பரவலாககார் நெல் சாகுபடி பணிகளில்விவசாயிகள் தீவிரம் காட்டியிருக்கிறார்கள். விளைநிலங்களை டிராக்டர்கள் அல்லது உழவு மாடுகள் மூலம் சீர்படுத்துதல், நாற்றுப்பாவுதல், நடவு செய்தல் என்று மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் விவசாய பணிகள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு பாசன பரப்புகளில் நாற்றுப்பாவும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அம்பாசமுத்திரம் அருகே செம்பத்திமேடு பகுதியில் நடவு பணிகளில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு சாகுபடி பணிகளை மேற்கொள்ளும் விவசாயி ராமசாமி கூறும்போது, ``கடந்த பருவத்தில் திடீரென்றுபெய்த மழையில் ஏராளமானநெற்பயிர்கள் சேதமடைந்துவிட்டன. இதனால் மகசூல் இழப்புஏற்பட்டது. செலவு செய்த பணம் மட்டுமே கிடைத்தது. இந்த பருவத்தில் அணைகளில் இருந்து உரியநேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் முன்கூட்டியே சாகுபடி பணிகளை தொடங்கியிருக்கிறோம். இம்முறை நல்ல மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இப்போது விளைவிக்கும் நெற்பயிர்கள் புரட்டாசி மாத கடைசியில் அறுவடை செய்யப்பட்டுவிடும். இதனால் ஐப்பசி மாத மழையில் பயிர்கள் சேதமாவதில் இருந்து தப்பிவிடலாம்” என்று தெரிவித்தார்.
மாவட்டத்தில் தாமிரபரணி, மணிமுத்தாறு பாசன பகுதிகளில் பெரும்பாலும் அம்பை 16, அம்பை 45 ரகங்கள் பயிரிடப்படுகின்றன. அதேநேரத்தில் களக்காடு உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பாசன பகுதிகளில் ஆடுதுறை 45 உள்ளிட்ட ரகங்களும் விளை விக்கப்படுகிறது.
உரிய காலத்தில் மாவட்டத்தில் கார் சாகுபடி தொடங்கியிருப்பதால் அடுத்து பிசான சாகுபடியும் குறிப்பிட்ட காலத்தில் மேற்கொள்ளப்படும் என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.
``மாவட்டத்தில் கார் பருவத்தில் 9,700 ஹெக்டேரில் நெல் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தற்போது பல்வேறு இடங்களிலும் நடவு பணிகள் நடைபெறுகின்றன. வரும் ஜூலை 15-ம்தேதி வரை இப்பணிகள் ஆங்காங்கே நடைபெறும்” என்று, வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT