Published : 24 Jun 2021 05:53 AM
Last Updated : 24 Jun 2021 05:53 AM
‘உங்கள் தொகுதியில் முதலமைச் சர்’ திட்டத்தின் பெறப்படும் மனுக்கள் மீது உரிய தீர்வு காண வேண்டும், காரணம் இல்லாமல் மனுக்களை தள்ளுபடி செய்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக் கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் துறை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள், சான்றிதழ்கள், பட்டாக்கள் மீதுள்ள நிலுவை குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்துப் பேசும்போது, ’’திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய வட்டங்களில் உள்ள 15 உள்வட்டங்களில் உள்ள வருவாய் கிராமங்களில் பொதுமக்கள் வருவாய்த் துறை மூலம் தீர்வுகாணக்கூடிய பிரச்சினைகளை மனுக்களாக வழங்கி வருகின்றனர். இதில், வருவாய் சான்றிதழ்கள் கோரியும், நிலம் மாற்றம், பட்டா பெயர் மாற்றம், உதவித்தொகை கேட்டு அளிக்கப்பட்ட மனுக்கள் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளதாக தெரிகிறது.
ஆவணங்களை சரிபார்த்து நிலுவையில் உள்ள மனுக்களை வரும் 28-ம் தேதிக்குள்ளாக விசாரணை நடத்தி ஜூலை 8-ம் தேதிக்குள் அனைத்து மனுக்கள் மீது தீர்வு காண வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி அந்தந்த வட்டாட்சியர்கள் இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
குறிப்பாக, பட்டா மாற்றம், நில மாற்றப்பணிகள், சட்டம்-ஒழுங்கு பணிகளில் ஒவ்வொரு வட்டாட்சியரும் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தீர்வு காண நிலவுடமை மேம்பாட்டு திட்டம் மனு மீது மாவட்ட வருவாய் அலுவலர் வாதி, பிரதிவாதிகளை நேரில் வரவழைத்து அவர்கள் அளிக்கும் ஆவணங்களை சரிபார்த்து அதன் அடிப்படையில் உரிய தீர்வு காண வேண்டும்.
அதேபோல, பட்டாவில் பெயர் மாற்றம், பெயர் திருத்தம் செய்ய வழங்கப்பட்ட மனுக்கள் மீது சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் உரிய ஆவணங்களை சரிபார்த்து அதற்கான தீர்வுகளை காண வேண்டும். இதற்கான வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்களின் அறிக்கைக்காக காலம் தாழ்த்த தேவையில்லை. மிகவும் பிரச்சினை உள்ள மனுக்கள் மீது மட்டுமே வட்டாட்சியர் அறிக்கை பெற்ற பிறகு தீர்வு காணலாம்.
மேலும், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் மூலம் பெறப்படும் மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 வட்டங்களில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களை விரைவாக விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும்.
60 நாட்களுக்கு மேலாக விசாரணையில் உள்ள மனுக்கள் மீது உடனடியாக தீர்வுகாண வேண்டும். காரணம் இல்லாமல் மனுக்களை தள்ளுபடி செய்யக்கூடாது. முடிந்த வரை மனுக்கள் மீதான தீர்வு காண வழி தேட வேண்டும். தவறும் பட்சத்தில் அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், சார் ஆட்சியர் (பொறுப்பு) வில்சன்ராஜசேகர், துணை ஆட்சியர் கிருஷ்ண மூர்த்தி, வட்டாட்சியர்கள் சிவப் பிரகாசம் (திருப்பத்தூர்), மோகன்(வாணியம்பாடி), அனந்தகிருஷ்ணன்(ஆம்பூர்), மகாலட்சுமி (நாட்றாம்பள்ளி), சமூகபாதுகாப்பு திட்ட வட்டாட்சியர்கள் குமார், பூங்கொடி, சாந்தி, சிவசுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT