Published : 22 Jun 2021 03:31 PM
Last Updated : 22 Jun 2021 03:31 PM
திருப்பத்தூர் அருகே கி.பி.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்களின் குல தெய்வமாக கருதப்பட்ட 'நிசும்ப சூதனி' சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு தலைமையிலான ஆய்வுக்குழுவினர், திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளியில் கள ஆய்வு மேற்கொண்ட போது சோழர்கள் வழிப்பட்ட பழமையான 'நிசும்ப சூதனி' சிற்பத்தை கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து, உதவி பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு கூறியதாவது:
"திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த திரவுபதியம்மன் கோயில் வளாகத்தில் பழம்பெரும் சிற்பம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்தோம். அந்த கோயிலில் சோழர்களின் குல தெய்வமாக கருதப்பட்ட 'நிசும்ப சூதனி' சிலை இருப்பதை கண்டறிந்தோம்.
இக்கோயில் திருப்பணிகள் நடைபெற்ற போது நிலத்தின் உள்ளே இந்த சிற்பம் புதைந்திருந்ததும், அதை கிராம மக்கள் மீட்டு கோயில் வளாகத்தில் சிலையாக வைத்து வழிபாடு நடத்தி வருவதும் தெரியவந்தது. அன்றைய காலத்தில் நிசும்ப சூதனியை வழிப்பட்ட பிறகே சோழ மன்னர்கள் ஒவ்வொரு போருக்கும் சென்றனர். 'நிசும்ப சூதனி'யை வழிப்பட்ட பிறகு சோழர்கள் சென்ற போர்களில் அவர்கள் மிகப்பெரிய வெற்றியை அடைந்தனர் எனக்கூறப்படுகிறது.
சோழர்கள் தங்களது வெற்றிக்கு காரணமான 'நிசும்ப சூதனி'யை குல தெய்வமாக கருதி சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டு வந்தனர் என்பது வரலாற்று ஆய்வுகள் கூறுகிறது.சோழர்களின் தலைநகரமாக விளங்கிய தஞ்சையை காக்கும் காவல் தெய்வமாகவும் நிசும்ப சூதனியை அவர்கள் கருதினர். இந்த தெய்வத்தை 'நிசும்ப சூதனி' அல்லது வட பத்ரகாளியம்மன் என அறியப்படுகிறது.
திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி கிராமத்தில் காணப்படும் 'நிசும்ப சூதனி', 3 அடி உயரத்தில் 8 கரங்களுடன் சிம்ம வாகனத்தில் காணப்படுகிறது. 'நிசும்ப சூதனி' வலது காலை தரையின் ஊன்றியபடி இடது காலை நிசும்பன் என்ற அசுரனின் உடல் மீது அழுத்தியபடி சூலத்தால் குத்தியபடி இச்சிலை காட்சியளிக்கிறது.
காதுகளில் பிரேத குண்டலத்தை அணிகலனாக சூட்டியுள்ளார்.
சிலையின் 8 கரங்களில் சூலம், கேடயம், வாள், வில், அம்பு, கபாலம், பாசம், மணியை தாங்கியபடி அருமையாக சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. நிசும்பன் என்ற கொடியை அசுரனை வதம் செய்தாமையால் 'நிசும்ப சூதனி' என்று அழைக்கப்படுகிறார். மாடப்பள்ளிக்கு மிக அருகாமையில் உள்ள மடவாளம் என்ற கிராமத்தில் தான் வரலாற்றுச்சிறப்பு மிக்க அங்கநாதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயில் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாக வரலாற்று ஆய்வுகள் கூறுகிறது. அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் தற்போது நிசும்ப சூதனி சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது பெருமைக்குரியதாக நாங்கள் கருதுகிறோம். சோழர்களுக்கு உரிய சிறப்பான கலைப்பாணியில் இச்சிற்பம் வடிவம் பெற்றுள்ளது.
இச்சிற்பம் கி.பி.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தாக இருக்கலாம் என வரலாற்றுத்துறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்றுள்ள இச்சிற்பத்தை பாதுகாத்து ஆவணப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாக உள்ளது".
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT