Published : 21 Jun 2021 03:14 AM
Last Updated : 21 Jun 2021 03:14 AM
செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை தடுப்பூசி எச்.எல்.எல். நிறுவனத்தை செயல்படுத்த வலியுறுத்தியும் தற்போதைய சூழலில் திமுக அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு மத்திய பாஜக அரசு முழு ஒத்துழைப்பும், ஒப்புதலும் வழங்க வேண்டியும் சிஐடியுவின் செங்கல்பட்டு மாவட்டக் குழு ஏற்பாடு செய்திருந்த இணையவழி கருத்தரங்கு நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த இந்நிகழ்வில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கேரள முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.சைலஜா, மார்க்சிஸ்ட் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராசன், மருத்துவர் ரெக்ஸ் சற்குணம், சிஐடியு மாநில துணைச் செயலாளர் எஸ்.கண்ணன், மாவட்ட தலைவர்கள் கே.சேஷாத்ரி, பகவத்சிங் தாஸ் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
பல்வேறு விழிப்புணர்வு பணிகளால் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வம் மக்களிடம் உருவாகியிருக்கிறது. இதனால், தடுப்பூசி தேவை அதிகரித்துள்ளது. 7 லட்சம் முதல் 8 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடக்கூடிய கட்டமைப்பு வசதிகள் இருந்தும், போதிய கையிருப்பு இல்லாததால் 3 லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை தமிழக அரசிடம் ஒப்படைத்தால் நமது தேவை மட்டுமல்ல மற்ற மாநிலங்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். குன்னூரில் 'பாஸ்டியர்' நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. அந்த நிறுவனம் எழுதிய கடிதத்துக்கும் பதில் அளிக்கவில்லை. செங்கல்பட்டு மற்றும் குன்னூர் நிறுவனங்களில் தடுப்பூசி தயார் செய்தால் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கும்.
தமிழ்நாட்டில் 18 வயது நிரம்பியவர்களில் தடுப்பூசி போடுவதற்கு தகுதி படைத்தவர்கள் 5 கோடியே 68 லட்சம் பேர். இவர்களுக்கு இருமுறை தடுப்பூசி செலுத்துவதற்கு 11 கோடியே 36 லட்சம் தடுப்பூசி தேவைப்படுகிறது. ஆனால், மத்திய அரசிடமிருந்து 1 கோடியே 2 லட்சம்தான் கிடைத்துள்ளது. இன்னமும் நமக்கு 10 கோடிக்கு மேல் தடுப்பூசி தேவைப்படுகிறது.
கரோனாவின் தாக்கம் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனாலும் எதிர்காலத்தில் மக்களை ஒட்டுமொத்தமாக பாதுகாக்க செங்கல்பட்டு தடுப்பூசி மையம் மற்றும் குன்னூர் பாஸ்டியர் மையம் ஆகியவற்றை திறக்கப்படுவதுதான் சிறந்த தீர்வாக இருக்க முடியும் என அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
கேரள மாநில முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.சைலஜா கூறியதாவது:
தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசிக்கான காப்புரிமை சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். கோவிஷீல்ட் மருந்தை நமது நாட்டிலேயே உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். அதற்காக பொதுத் துறை தடுப்பூசி நிறுவனங்களை பலப்படுத்த வேண்டியுள்ளது.
நாட்டில் 90 சதவீதம் மக்களுக்கு தடுப்பு ஊசியை கட்டாயம் செலுத்த வேண்டும் என்கிற முடிவுக்கு வர வேண்டும். அந்த முடிவை அமலாக்குவதற்கு அதிகாரப் பரவல் அவசியமாக உள்ளது. இதற்காக செங்கல்பட்டு நிறுவனம் திறக்கப்பட வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT