Published : 16 Jun 2021 03:13 AM
Last Updated : 16 Jun 2021 03:13 AM
சிவகங்கை மாவட்ட மின்வாரியத்தில் இலவச விவசாய மின் இணைப்புக்கான ஆவணங்கள் மாயமானதால், மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் பெற, சுயநிதி, சாதாரண பிரிவு என 2 திட்டங்கள் மூலம் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. சுயநிதி பிரிவில் ரூ.10ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என 3 பிரிவுகளில் வைப்புத் தொகை செலுத்த வேண்டும். ஆனால், சாதாரண பிரிவில் வைப்புத் தொகை செலுத்த தேவையில்லை. இந்த திட்டங்களில் இதுவரை 4.75 லட்சம் விவசாயிகள் மின் இணைப்புக்காக காத்திருக்கின்றனர். மேலும் 2017-ம் ஆண்டு முதல் சுயநிதி பிரிவு, விரைவு மின் இணைப்புத் திட்டமாக மாற்றப்பட்டது. இதில் விவசாய மின் மோட்டாரின் குதிரைத் திறனுக்கு ஏற்ப, ரூ.2.5 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை வைப்புத் தொகை செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில் சில மாதங்களிலேயே மின் இணைப்பு கொடுக்கப்படுகிறது.
இந்நிலையில் சிவகங்கை மாவட்ட மின்வாரியத்தில் 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகளுக்கு முன்பு விவசாய மின் இணைப்பு பெற்றவர்களில் பலரது ஆவணங்கள் மாயமாகி விட்டன. இதனால் அவர்களது மின் இணைப்புகளை மின்வாரியத்தினர் துண்டித்து வருகின்றனர். மின்சாரம் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து சிவகங்கை டி.புதூர் விவசாயி ரமணி கூறியதாவது:
சுய நிதி பிரிவில் ரூ.25 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்தி 20 ஆண்டுகளுக்கு முன் இலவச மின் இணைப்பு பெற்றேன். 3 மாதங்களுக்கு முன்பு திடீரென மின் இணைப்பைத் துண்டித்து விட்டனர்.
இதுகுறித்து சிவகங்கை மின்வாரியத்தில் கேட்டபோது, நாங்கள் மின் இணைப்பு பெற்றதற்கான ஆவணமே இல்லை என்றனர். அதன்பிறகு அனைத்து ஆவணங்களையும் அதிகாரிக ளிடம் காண்பித்தும், இதுவரை மின்இணைப்பு கொடுக்கவில்லை. இதனால் விவசாயம் செய்ய முடியவில்லை. மின்வாரியமே ஆவணங்களை தொலைத்துவிட்டு எங்களை அலைக்கழிக்கின்றனர், என்றார்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இப்பிரச்சினை தமிழகம் முழுவதும் உள்ளது. ஆவணங்கள் இல்லாத மின் இணைப்பு குறித்து விசாரணை நடத்தி, சென்னை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வருகிறோம். அங்கு தான் மின் இணைப்பு கொடுப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT