Published : 16 Jun 2021 03:14 AM
Last Updated : 16 Jun 2021 03:14 AM

தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத திட்டங்களையும் அறிவித்து நிறைவேற்றி வருகிறார் ஸ்டாலின்: பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு புகழாரம்

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் உள்ள நியாய விலைக் கடையில் பயனாளி ஒருவருக்கு 2-வது தவணை நிவாரண தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் நிவாரண பொருட்களை வழங்கிய பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு.

திருவண்ணாமலை

தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத திட்டங்களையும் அறிவித்து நிறைவேற்றி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2-ம் கட்ட கரோனா நிவாரணத் தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகை நிவாரண பொருட்கள் வழங்கும் திட்டம் திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் உள்ள நியாய விலைக் கடையில் நேற்று காலை நடைபெற்றது. பயனாளிகளுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான நிவாரணப் பொருட்களை வழங்கி பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் நினைத்தால், கரோனா பாதிப்பை விரைவாக குறைக்க முடியும். தேவையின்றி வெளியே வர வேண்டாம். கரோனா தடுப்புப் பணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தொற்று அதிகம் பாதித்திருந்த கோவைக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து, தொற்று பரவலை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். வீடு திரும்பும்போது கைகளை கழுவ வேண்டும். கரோனா தொற்று பரவலை தடுப்பதில், முதல்வரின் அறிவுரைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.

முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதும், நகர்புற அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், ஆவின் பால் விலை குறைப்பு உட்பட 5 திட்டங்களுக்கு கையொப்பமிட்டுள்ளார். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு தனி அதிகாரி நியமிக்கப்பட்டு, மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.

அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று ரூ.497 கோடி நிலுவைத் தொகையை வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மக்கள் நலன் சார்ந்த அரசாக செயல்பட்டு, அதற்கான திட்டங்களை தீட்டி வருகிறார். கரோனா ஊரடங்கு காலத்தில் வேலை இல்லாமல் பலர் கஷ்டப்படுவதை உணர்ந்து, 2,09,81,900 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடை மூலம் தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அதன்படி, ரூ.4,196.38 கோடியில் முதல் தவணையாக கடந்த மாதம் தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. இதையடுத்து, 2-வது தவணையாக ரூ.2 ஆயிரம் இன்று (நேற்று) முதல் வழங்கப்படுகிறது.

தி.மலை மாவட்டத்தில் முதல் தவணையாக 1,633 நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி பெறும் 7,60,743 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.152.15 கோடியில் தலா ரூ.2 ஆயிரம் வழங்கப் பட்டுள்ளது. இதையடுத்து, 2-வது தவணையாக 1,633 நியாய விலைக் கடை மூலம் அரிசி பெறும் 7,61,281 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.152.26 கோடியில் தலா ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி இன்று (நேற்று) தொடங்கப் பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 14 வகையான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பும் வழங்கப்படுகிறது. நிவாரண தொகுப்பு வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் முதல்வர் குறிப்பிடவில்லை. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத திட்டங்களையும் அறிவித்து நிறைவேற்றி வருகிறார். மக்களின் நாடியை பிடித்து ஆட்சியை நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்” என்றார்.

இதில், துணை சபாநாயகர் பிச்சாண்டி, ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அண்ணாதுரை எம்பி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x