Published : 16 Jun 2021 03:15 AM
Last Updated : 16 Jun 2021 03:15 AM

மணல் கொள்ளையை தடுக்க தவறியதை கண்டித்து நாகநதி ஆற்றில் இறங்கி கிராம மக்கள் போராட்டம்: நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு கோரிக்கை

கண்ணமங்கலம் அடுத்த காட்டுக்காநல்லூர் கிராமத்தில் உள்ள நாகநதியில் மணல் கொள்ளை நடைபெறுவதை தடுக்க தவறிய வருவாய் மற்றும் காவல்துறையினரை கண்டித்து ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம் அருகே நாக நதியில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க தவறிய அரசு அதிகாரிகளைக் கண்டித்து ஆற்றில் இறங்கி கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் கிராமம் வழியாக நாகநதி ஆறு செல்கிறது. ஆற்றில் தண்ணீர் செல்வதால், காட்டுக்காநல்லூர் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் விவசாயப் பணி தடையின்றி நடைபெறுகிறது.

இந்நிலையில், நாகநதி ஆற்றில் இருந்து ‘பொக்லைன்’ இயந்திரம் மூலம் மணலை எடுத்து, கரையோரத்தில் கடத்தல்காரர்கள் குவித்துள்ளனர். ஈரம் காய்ந்த பிறகு, குவித்து வைக்கப்பட்ட மணல் கடத்தப்படுகிறது. இது குறித்து ஆரணி வருவாய்த் துறை மற்றும் கண்ணமங்கலம் காவல் நிலையத்துக்கு பலமுறை புகார் தெரிவித்தும் பலனில்லை என கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள், நாகநதி ஆற்றில் இறங்கி நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, “எங்களது விவசாயத்துக்கு வாழ்வாதாரமாக விளங்குவது நாகநதி. அதனை நம்பிதான் நாங்கள் சாகுபடி செய்து வருகிறோம். மேலும், நாகநதியில் தண்ணீர் செல்லும், எங்கள் கிராமம் மட்டுமின்றி சுற்றுப் பகுதி கிராமங்களின் நிலத்தடி செறிவூட்டப்படும். நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. அதேபோல், குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது.

ஆனால், மணல் கொள்ளையர் களால் எதிர்காலத்தில் நாகநதி ஆற்றின் தடையம் மறைந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இரவு, பகல் பாராமல் மணல் சுரண்டப் படுவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயத் தேவைக்கு மட்டும் இல்லாமல் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு விடும். மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆரணி வருவாய்த் துறையினர் மற்றும் கண்ணமங்கலம் காவல் நிலையத்துக்கு பலமுறை புகார் தெரிவித்தும் பலனில்லை. மணல் கொள்ளையை தடுத்து, மணல் கொள்ளையில் ஈடுபடுவர்களை கைது செய்ய தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

பின்னர் அவர்கள், மணல் கொள் ளைக்கு எதிராக முழக்கமிட்டுவிட்டு கலைந்து சென்றனர். அப்போது அவர்கள், நாகநதி ஆற்றின் கரை யோரத்தில் குவித்து வைக்கப்பட் டுள்ள மணல் குவியலை புகைப் படம் எடுத்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் தெரிவிக்க போவதாக தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x