Published : 12 Jun 2021 07:03 AM
Last Updated : 12 Jun 2021 07:03 AM

தி.மலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 2 பேருக்கு தீவிர சிகிச்சை: 24 மணி நேர கண்காணிப்பில் உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தகவல்

திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு. அருகில், ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர்.

திருவண்ணாமலை

தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார். கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, மருந்து, உணவு மற்றும் அவர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், உள் நோயாளிகள் பிரிவு, ஆக்சிஜன் சேமிப்பு பகுதிகளை பார்வையிட்டார். பின்னர், மருத்துவமனையில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார்.

இதையடுத்து, செய்தியாளர் களிடம் அவர் கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக கரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு தேவையான மருந்து உள்ளது. தற்போது, கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ள 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களை, மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ள தி.மலை மாவட்டத்தைச் சேர்ந்த 25 பேர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேரடியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் 15 பேரும், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 7 பேரும், மேல்மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2 பேரும், மற்றொரு தனியார் மருத்துவமனையில் ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை நகரில் அவலூர் பேட்டை சாலை ரயில்வே ‘கேட்’ மற்றும் வேட்டவலம் சாலைரயில்வே ‘கேட்’ பகுதியில் உயர் மட்ட மேம்பாலங்கள் அமைக்கவும்மற்றும் வேலூர் – செங்கம் புறவழிச் சாலையை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பயன்பெறும் வகையில் உழவர் சந்தைகள் புனரமைக்கப்படும். விவசாயி களின் நலன் கருதி, தேவைப்படும் இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப் படும்” என தெரிவித்தார்.

அப்போது ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முன்னதாக, திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருக்கோயில் பணியாளர்களுக்கு கரோனா நிவாரண உதவி மற்றும் அடி அண்ணாமலை ஊராட்சியில் மரக்கன்று நடும் திட்டத்தை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

1,750 டோஸ் தடுப்பூசி

தி.மலை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் என அடுத்தடுத்து மத்திய அரசு அனுமதி வழங்கியதால், தடுப்பூசி செலுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வந்தது.

கோவாக்சின் மற்றும் கோவி ஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட் டன. மாவட்டம் முழுவதும் 1,32,325 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 31,577 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

இந்நிலையில், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் கடந்த 5-ம் தேதியுடன் தடுப்பூசி செலுத்தும் பணி முடிவுக்கு வந்தது. 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை என 5 நாட்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறவில்லை.

இதற்கிடையில், தி.மலை மாவட்டத்துக்கு 1,750 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி நேற்று முன் தினம் மாலை வந்துள்ளது. அதன்பிறகு மாவட்டத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு தடுப்பூசி பிரித்து அனுப்பப்பட்டது. இதையடுத்து, 5 நாட்களுக்கு பிறகு தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று மீண்டும் தொடங்கியது.

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி செலுத்தும் பணியை பொதுப்பணித் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

தடுப்பூசி குறித்து சுகாதாரத் துறையினர் கூறும்போது,‘‘தி.மலை மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட 1,750 டோஸ் தடுப்பூசியும் இன்று (நேற்று) செலுத் தப்பட்டுவிட்டது. 2-வது தவணை செலுத்திக் கொண்டவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இன்று (நேற்று) இரவுக்குள் 13 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி வந்து சேரும் என எதிர்பார்க் கப்படுகிறது. தடுப்பூசி வந்ததும் மாவட்டம் முழுவதும் பிரித்து அனுப்பி வைக்கப்படும். அதன்மூலம் நாளையும் (இன்று) தடை யின்றி தடுப்பூசி செலுத்த வாய்ப்பு உள்ளது” என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x