Published : 10 Jun 2021 03:13 AM
Last Updated : 10 Jun 2021 03:13 AM
தன்னைப்போல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறார் விருதுநகரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஒருவர்.
விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் முத்து மணிகண்டன்(46). இரு கால்களும் ஊனமுற்று நடக்க முடியாமல் தவழ்ந்து செல்லும் மாற்றுத் திறனாளி. டி.வி. பழுது நீக்கும் பணி செய்து வருகிறார். கடந்த கரோனா காலத்திலும், இரண்டாம் அலையின்போதும் ஊரடங்கு விதிக்கப்பட்டதால் உணவுக்கு வழியின்றி தவிக்கும் சக மாற்றுத் திறனாளிகளுக்கு முத்து மணிகண்டன் உதவி வருகிறார். இது குறித்து அவர் கூறியதாவது:
விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 35,000 மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். பார்வை குறைபாடு, கை, கால்கள் ஊனம், செவித்திறன் குறைபாடு, வளர்ச்சி இல்லாதோர் எனப் பல்வேறு வகையான மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்கள் தங்கள் குடும்பத்தையே சார்ந்து வாழ்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே சுய தொழில் செய்கின்றனர்.
தற்போது ஊரடங்கு காரணமாக மாற்றுத் திறனாளிகள் தங்களது தொழிலை செய்ய முடியாமலும், அவர்களைப் பராமரித்து வரும் குடும்பத்தினரும் வருமானம் ஈட்ட முடியாமலும் தவிக்கின்றனர்.
அவர்களுக்கு உதவ வேண்டும் எனத் திட்டமிட்டோம். அதன்படி ராம்கோ சமூக சேவை கழகம் மூலம் தலா ரூ.1,300 மதிப்பில் 200 மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினைப் பெற்று அவர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்கியுள்ளேன்.
மேலும் எனது வருமானம், நண்பர்கள் அளிக்கும் அன்பளிப்பு ஆகியவை காரணமாக மேலும் நூறு மாற்றுத் திறனாளிகளுக்கு இதேபோல் ஒரு மாதத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பும் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் முடிந்த அளவு அத்தியாவசியப் பொருட்களை வழங்கத் திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT