Published : 08 Jun 2021 03:13 AM
Last Updated : 08 Jun 2021 03:13 AM
நடப்புக் கல்வியாண்டிலேயே கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கரோனா தொற்றைத் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மாநில மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாவட்டந்தோறும் நேரில் சென்று மருத்துவப் பணிகளை ஆய்வு செய்து, உரிய அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர்.
அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் சுகாதாரத் துறை செயலர் ராதா கிருஷ்ணனும் வந்திருந்தார். அங்கு, அமைச்சர் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வுசெய்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம் அரசு மருத்துவமனையை பார்வையிட்ட அமைச்சர், அங்கு பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் அலுவ லர்களிடம் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அங்கு கரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை மருத்துவமனைமற்றும் கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைகள் குறித்தும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து சங்கராபுரம், திருக்கோவிலூர் பகுதிகளிலும் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இந்த ஆய்வு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கிரன்குராலா, கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினர் கவுதமசிகாமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மணிகண்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழக முதல்வர், கரோனா சிகிச்சை மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமனம் செய்து கொள்ள ஆணையிட்டு, அதன்படி அனைத்து மாவட்டங் களிலும் பணி நியமனம் நடைபெற்று வருகிறது.
அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூடுதலாக 30 மருத்துவர்கள் ,68 செவிலியர்கள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடில்லாமல் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் நடப்பு கல்வியாண்டிலேயே கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். அதற்கான கட்டிட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன ” என்று தெரிவித்தார்.
கருப்பு பூஞ்சை தொற்றாளர்களுக்காக அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு இதனிடையே விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 1,039 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய்க்காக இதுவரை மத்திய அரசின் தொகுப்பிலிருந்து 3,060 ‘வயல்’ மருந்து குப்பிகள் வந்துள்ளன. இந்நோய் உள்ளவர்களுக்கு ஒருவருக்கு 50 அல்லது 60 மருந்துகள் அளிக்க வேண்டும். 35 ஆயிரம் மருந்துகள் தேவைப்படுகின்றன. இதுகுறித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. போதிய அளவு மருந்து அனுப்பப்படவில்லை. கரோனா இறப்பை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. உண்மையான நிலையை சொன்னால்தான் மக்களுக்கு பயமும் விழிப்புணர்வும் ஏற்படும். கடந்த ஆட்சியில்தான் காலரா நோய்க்கு வட சென்னையில் 21 பேர் உயிரிழந்தவர்களை மறைத்து வைத்தார்கள். கடந்த ஆட்சியில் ‘அவுட் சோர்ஸிங்’ மூலம் பணி நியமனம் செய்தது போல செய்யாமல், நேரடியாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கருப்பு பூஞ்சை நோய்க்கு சென்னையில் ராஜீவ்காந்தி, ஓமந்தூரார் மருத்துவமனை மற்றும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் தனி வார்டு தொடங்கப்பட்டுள்ளன. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனி வார்டு தொடங்க இருக்கிறோம் என்று தெரிவித்தார். |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT