Last Updated : 04 Jun, 2021 08:24 PM

1  

Published : 04 Jun 2021 08:24 PM
Last Updated : 04 Jun 2021 08:24 PM

ஊரடங்கால் தென்மாவட்டங்களில் 20 ஆயிரம் ஜேசிபி இயந்திரங்கள் முடக்கம்: தவணை செலுத்துவதை 6 மாதங்களுக்கு தள்ளிவைக்க கோரிக்கை

சிவகங்கை

கரோனா ஊரடங்கால் தென்மாவட்டங்களில் 20 ஆயிரம் ஜேசிபி இயந்திரங்கள் முடங்கியுள்ளன. இதனால் தவணைத் தொகை செலுத்துவதை 6 மாதங்களுக்கு தள்ளிவைக்க வேண்டுமென அதன் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பல்வேறு பணிகள் நடந்து வந்தன.

இந்த இயந்திரங்களை, அதன் உரிமையாளர்கள் தனியார் நிதி நிறுவனங்கள், வங்கிகள் மூலம் கடன் பெற்று வாங்கியுள்ளனர்.

அவற்றிற்கு மாதந்தோறும் தவணைத் தொகை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தளர்வுகளற்ற கரோனா ஊரடங்கால் ஜேசிபி இயந்திரங்கள் இயங்காமல் முடங்கியுள்ளன. இதனால் உரிமையாளர்களால் தவணைத்தொகை செலுத்த முடியவில்லை. பலரது இயந்திரங்களை தனியார் நிறுவனங்கள் எடுத்து செல்ல போவதாக மிரட்டியுள்ளன.

இதையடுத்து தென்மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் முன்னேற்ற நல சங்க மாநிலத் தலைவர் தங்கப்பாண்டியன், அமைப்புச் செயலாளர் தர்மர், சிவகங்கை மாவட்டத் தலைவர் முத்துக்குமரேசன் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியதாவது: கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்துள்ள நிலையில் நிதி நிறுவனங்கள், வங்கிகள் தவணைத் தொகை கட்ட தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இதனால் தவணைத் தொகை செலுத்துவதை 6 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும். ஆறு மாதங்களுக்குரிய வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். சாலை வரி, காப்பீடு தொகை செலுத்துவதையும் காலநீட்டிப்பு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x