Published : 02 Jun 2021 01:38 PM
Last Updated : 02 Jun 2021 01:38 PM
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திற்கு 18,000 கோவிஷீல்டு தடுப்பூசிகள் மற்றும் 3,000 கோவாக்சின் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓரிரு நாட்களில் முகாம் தொடங்கப்படும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கடந்த மாதத் தொடக்கத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளப் பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் முகாம்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
அந்தந்த மாவட்ட சுகாதாரத் துறை மூலம் தடுப்பூசி போட்டுக்கொள்ளப் பல வழிகளில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது. அதே நேரத்தில், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு நேரடியாகச் சென்ற முன்களப் பணியாளர்கள் தடுப்பூசியின் அவசியம் குறித்தும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஆனால், தடுப்பூசி மீது இருந்த அவநம்பிக்கையால் பொதுமக்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முன்வரவில்லை. இந்நிலையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கரோனா தாக்கம் தினசரி அதிகரித்து, நாள் ஒன்றுக்கு 2,500-ஐக் கடந்ததாலும், அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதி கிடைக்காமல் நிறையப் பேர் அவதிப்பட்டு வருவதையும், நோய்த் தாக்கம் அதிகரித்துப் பலர் உயிரிழந்த சம்பவங்களையும் பார்த்த பொதுமக்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளத் தாமாக முன்வந்தனர்.
இதற்கிடையே, 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாம் தொடங்கப்பட்டது. அதில் அதிக அளவில் கலந்துகொண்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தனர். அதன்பிறகு, 45 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள அதிக அளவில் ஆர்வம் காட்டினர்.
இதனால், 3 மாவட்டங்களிலும் அனைத்து முகாம்களில் கடந்த வாரம் தடுப்பூசி செலுத்திக் கொள்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகள் நேற்று முன்தினம் முழுமையாகத் தீர்ந்தன. இதனால், ஜூன் 2-ம் (இன்று) தடுப்பூசி முகாம்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. ஜூன் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை தடுப்பூசி முகாம் நடக்காது என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திற்கு இன்று 7,000 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 1,000 கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளும் வந்தடைந்தன. இந்தத் தடுப்பூசி மருந்துகள் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே போடுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து முறையான அறிவிப்பு வெளியான பிறகு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் நேரில் சென்று தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம் என மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல, ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு 6 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 1,000 கோவாக்சின் தடுப்பூசிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள முகாம்களில் ஓரிரு நாளில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் என மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 5 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 1,000 கோவாக்சின் தடுப்பூசிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் விரைவில் நிறுத்தப்பட்டுள்ள தடுப்பூசி முகாம் தொடங்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விரைவில் தடுப்பூசி முகாம் தொடங்கப்படும் என 3 மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT