Last Updated : 25 May, 2021 05:22 PM

2  

Published : 25 May 2021 05:22 PM
Last Updated : 25 May 2021 05:22 PM

சிவகங்கையில் அமரர் ஊர்தி பற்றாக்குறை: சடலத்தை எடுத்துச் செல்ல 300 மீ.,க்கு ரூ.1,500 வாங்கும் தனியார் ஆம்புலன்ஸ்கள்

சிவகங்கை

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமரர் ஊர்தி பற்றாக்குறையால் சடலத்தை எடுத்துச் செல்ல தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் 300 மீ.,க்கு ரூ.1,500 வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை எட்டியுள்ளது. தினமும் சராசரியாக 200 பேர் பாதிக்கப்படுகின்றனர். தற்போது 1,700-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் கரோனா தொற்று மற்றும் கரோனா அறிகுறியுடன் 650-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் கரோனா தொற்று, மூச்சுத்திணறல் போன்ற காரணங்களால் தினமும் 25-க்கும் மேற்பட்டோர் இறந்து வருகின்றனர். இறந்தவர் உடல்களை, ஒருசிலர் மட்டுமே தங்களது சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்கின்றனர். பெரும்பாலானோர் மருத்துவமனை அருகேயுள்ள நகராட்சி எரிவாயு தகன மேடையிலேயே எரியூட்டுகின்றனர்.

இந்நிலையில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 அமரர் ஊர்திகள் மட்டுமே உள்ளன. அந்த வாகனங்களும் பெரும்பாலாலும் ராமநாதபுரம், மதுரை போன்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்த சடல்களை எடுத்துச் சென்றுவிடுகின்றனர்.

அமரர் ஊர்தி இல்லாதததால் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், சடலங்களை எடுத்துச் செல்ல தனியார் ஆம்புலன்ஸ்களை நாடுகின்றனர்.

அவர்கள் சிவகங்கையை தவிர்த்து மற்ற ஊர்களுக்கு தூரத்திற்கு ஏற்ப ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை வாங்குகின்றனர். மேலும் சிவகங்கை மயானம் மருத்துவமனையில் இருந்து 300 மீ., தொலைவிலேயே உள்ளது. அந்த மயானத்திற்கு எடுத்துச் செல்ல ரூ.1,500 வாங்குகின்றனர். வசதிபடைத்தோர் தனியார் ஆம்புலன்ஸ்களில் சடலத்தை எடுத்துச் செல்கின்றனர். ஏழைகள் கடன் வாங்கி பணம் செலுத்தும்நிலை உள்ளது.

சிலர் அரசு அமரர் ஊர்தி வரும் வரை பிரேதத்தை எடுப்பதில்லை. சிலசமயங்களில் அமரர் ஊர்திக்காக மறுநாள் வரை காத்திருக்கின்றனர். இதனால் அரசே தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு தூரத்திற்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்க வேண்டுமென சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘ சிவகங்கை மாவட்டத்தில் 3 அமரர் ஊர்திகள் உள்ளன. இரண்டு வாகனங்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையிலும், ஒன்று காரைக்குடி அரசு மருத்துவமனையிலும் இயங்கப்படுகின்றன. தற்போது இறப்பு அதிகரித்துள்ளதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது,’ என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x