Last Updated : 21 May, 2021 06:03 PM

 

Published : 21 May 2021 06:03 PM
Last Updated : 21 May 2021 06:03 PM

சிவகங்கையில் மருத்துவக் காப்பீடு எடுக்கக் கரோனாவால் பாதிக்கப்பட்டவரே ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவ காப்பீட்டுக்காக ஆம்புல்ஸில் வந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பிய ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி.

சிவகங்கை

கரோனாவால் பாதிக்கப்பட்டவர் மருத்துவக் காப்பீடு எடுக்க மதுரை மருத்துவமனையில் இருந்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆம்புலன்ஸில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களை வரவழைத்த காப்பீட்டு திட்ட ஊழியர்களை ஆட்சியர் பி.மதுசூதன் எச்சரித்தார்.

திருப்புவனம் அருகே லாடனேந்தலைச் சேர்ந்தவர் ராஜபிரபு. சிலதினங்களுக்கு முன்பு கரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் முதல்வர் அறிவித்தபடி தனக்கு முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை அளிக்குமாறு கேட்டு கொண்டுள்ளார்.

ஆனால் அவருக்கு காப்பீட்டு அட்டை இல்லை. இதையடுத்து ராஜபிரபுவின் உறவினர்கள் சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ காப்பீட்டுத் திட்ட மையத்தை அணுகியுள்ளனர்.

காப்பீட்டு அட்டை பெற சம்பந்தப்பட்டவரை அழைத்து வர வேண்டுமென காப்பீட்டுத் திட்ட ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ராஜபிரபுவை இன்று மதுரை மருத்துவமனையில் இருந்து ஆக்சிஜன் வசதியுள்ள ஆம்புலன்ஸில் சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

இதைப் பார்த்ததும் அதிகாரிகள் ஆட்சியருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த ஆட்சியர், ராஜபிரபுவை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் தெரிவித்தார்.

மேலும் இதுபோன்று கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அலுவலகத்திற்கு வரவழைக்க கூடாது என காப்பீட்டுத் திட்ட ஊழியர்களையும் எச்சரித்தார். கரோனாவால் பாதிக்கப்பட்டவரை மருத்துவ காப்பீடு அட்டைக்காக அலைக்கழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x